ஆயுள் தண்டனை கைதிகள் 12 பேர் விடுதலை: ஆளுநர் ரவி ஒப்புதல்!

நீண்டகாலமாக சிறையில் இருக்கும் ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்யக் கோரி தமிழக அரசு அளித்த பரிந்துரைக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்ததை அடுத்து, அவர்கள் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். தமிழக அரசின் இந்த பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருந்து வந்த நிலையில், தற்போது இந்த ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது.

சுதந்திரப் போராட்ட தியாகிகள் பிறந்தநாள், முக்கிய அரசியல் தலைவர்கள் பிறந்தநாளில் சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்படுவது வழக்கம். இது தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள நடைமுறை தான். நன்னடத்தை, நீண்டகாலமாக சிறையில் இருப்பவர்கள், ஆயுள் கைதிகள் ஆகியோர் இவ்வாறு விடுதலை செய்யப்படுவார்கள். அந்த வகையில், கடந்த ஆண்டு அண்ணா பிறந்தநாளை ஒட்டி, ஆயுள் தண்டனை கைதிகள் 12 பேரை விடுதலை செய்யக் கோரி தமிழக அரசு ஆளுநருக்கு பரிந்துரைத்தது.

ஆனால், இந்த பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருந்து வந்தார். இதற்கு திமுக உள்ளிட்ட அதன் கூட்டணிக் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அதே சமயத்தில், தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு சிறையில் இருக்கும் இஸ்லாமிய சிறைக் கைதிகளை திமுக அரசு விடுதலை செய்ய கோருவதாக பாஜக குற்றம்சாட்டி வந்தது.

இந்நிலையில், தமிழக அரசின் பரிந்துரைக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்தார். இதனைத் தொடர்ந்து, ஆயுள் சிறைக்கைதிகள் 12 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடலூர் சிறையில் இருந்த செல்வராஜ், சேகர் பெரியண்ணன், உத்திரவேல் என 4 பேரும், கோவை சிறையில் இருந்து அபுதாஹிர், விஸ்வநாதன், பூரி கமல், ஹாரூன் பாட்ஷா, சாகுல் ஹமீது, பாபு ஆகிய 6 பேரும், புழல் சிறையில் இருந்து ஜாஹிர், சீனிவாசன் ஆகிய 2 பேரும் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.