அரவிந்த் கெஜ்ரிவால் பிப். 17ல் நேரில் ஆஜராக நீதிமன்றம் சம்மன்!

டெல்லி புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சம்மன் அனுப்பியும் அமலாக்கத்துறை விசாரணைக்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. இதையடுத்து அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

டெல்லியில் ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளராக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். ஊழலுக்கு எதிராக தொடங்கப்பட்ட கட்சியான ஆம் ஆத்மி மீது தற்போது பல்வேறு ஊழல் புகார்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டெல்லி புதிய மதுபான கொள்கையை வகுத்து செயல்படுத்தியதில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளதாக பாஜக குற்றம்சாட்டியது. இதுதொடர்பாக சிபிஐ விசாரித்த நிலையில் சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடந்தது தெரியவந்தது.

இதையடுத்து அமலாக்கத்துறையும் விசாரணையை தொடங்கியது. இந்த வழக்கில் டெல்லி துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளது. மேலும் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர். அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைத்த நிலையில் கெஜ்ரிவால் ஆஜராகாமல் உள்ளார்.

அமலாக்கத்துறை சார்பில் 5 முறை விசாரணைக்கு அழைத்து சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் அதனை புறக்கணித்துள்ளார். அவர் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த வழக்கை பாஜக கொண்டு செல்கிறது. அமலாக்கத்துறை மூலம் தன்னையும், தனது கட்சியையும் காலி செய்ய பாஜக திட்டமிட்டுள்ளது என குற்றம்சாட்டி உள்ளார்.

இந்நிலையில் தான் அமலாக்கத்துறை சார்பில் டெல்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக புகார் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கான சம்மனை ஏற்காமல் இருக்கிறார் எனக்கூறியும், சம்மன் அனுப்பப்பட்டது தொடர்பான சில விபரங்களை அமலாக்கத்துறை அளித்துள்ளது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் இன்று விசாரணை நடத்தியது. நீதிபதி திவ்யா மல்கோத்ரா விசாரணை நடத்தினார். அப்போது பிப்ரவரி 17 ம் தேதி நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகி அமலாக்கத்துறை விசாரணையை புறக்கணித்தது ஏன்? என்பது பற்றி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். அதோடு விசாரணைக்கு ஆஜராக வேண்டி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பும்படியும் நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார்.

இந்த நீதிமன்ற உத்தரவால் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது அவர் நீதிமன்றத்தில் கட்டாயம் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். மேலும் நீதிமன்றத்தில் அவர் கூறும் தகவல் மற்றும் அதன் மீதான நீதிமன்றத்தின் பார்வையை தொடர்ந்து இந்த வழக்கில் அடுத்தக்கட்ட நகர்வு இருக்கும். இதனால் நீதிமன்றத்தின் இன்றைய உத்தரவு என்பது அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்த அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.