வெற்றி துரைசாமி சென்ற கார் இமாச்சல பிரதேசம் சட்லெஜ் ஆற்றில் கவிழ்ந்து விபத்தில் சிக்கிய செய்தியறிந்து, பெரும் அதிர்ச்சியடைந்தேன். வெற்றி இன்னமும் ஏதோ ஓர் இடத்தில் நலமோடு இருக்கிறார், விரைவில் திரும்பி வந்துவிடுவார் என்பதே என் விருப்பமாக இருக்கிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி மேயராக இருந்த சைதை துரைசாமியின் மகன் வெற்றி. இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. தொழிலதிபரான வெற்றி துரைசாமி, மனிதநேயம் அகாடமி ஐஏஎஸ் பயிற்சி மையத்தை கவனித்து வருகிறார். சினிமா படங்களையும் வெற்றி துரைசாமி இயக்கி வருகிறார். இந்த நிலையில், கடந்த 4 ஆம் தேதி சிம்லா, லடாக் பகுதிகளுக்கு தனது உதவியாளர் கோபிநாத்துடன் வெற்றி துரைசாமி சுற்றுலா சென்று இருந்தார். இருவரும் 4ஆம் தேதி பிற்பகல் சிம்லா நோக்கி இன்னோவா காரில் சென்று கொண்டிருந்தனர். இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த தன்ஜின் என்பவர் காரை அப்போது, கார் ஓட்டுநர் தன்ஜினுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, சட்லஜ் ஆற்றில் கவிழ்ந்தது. தகவலறிந்த போலீசார், தீயணைப்பு படையினர், மீட்பு படையினர் அங்கு சென்று காரை மீட்ட போது அதில் தன்ஜின் உயிரிழந்திருந்தார். அது போல் அங்கிருந்த கற்கள் மீது விழுந்த கோபிநாத் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். சட்லஜ் ஆற்றில் மாயமான வெற்றி துரைசாமியை தேடும் பணிகள் 5 நாட்களாக நடைபெற்று வருகின்றன. சைதை துரைசாமியும் இமாசல பிரதேசம் சென்றுள்ளார். மாயமான தனது மகன் குறித்து தகவல் கொடுத்தால் ரூ 1 கோடி வழங்குவதாக சைதை துரைசாமி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-
சைதை தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் சென்னை மாநகர மேயருமான எனது பேரன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய ஐயா சைதை துரைசாமி அவர்களின் அன்புமகன் வெற்றி அவர்கள் இமாச்சல பிரதேசம் சட்லெஜ் ஆற்றில் மகிழுந்து கவிழ்ந்த விபத்தில் சிக்குண்ட செய்தியறிந்து, பெரும் அதிர்ச்சியடைந்தேன்.
எல்லோரிடமும் அன்புடனும், மிகுந்த மரியாதையுடனும் பேசிப் பழகும் பெருங்குணமும், எளிமை பண்பும் ஒருங்கே கொண்ட தம்பி வெற்றியின் நிலை என்னவென்பது தெரியாத கொடுஞ்சூழல் மிகுந்த மனவலியை தருகிறது. மனிதநேய அறக்கட்டளை மூலம் இலவசப் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி அளித்துப் பல்லாயிரக்கணக்கான ஏழை எளிய வீட்டுப் பிள்ளைகள் வாழ்வில் ஒளியேற்றி வைத்த பெருந்தகை ஐயா சைதை துரைசாமி அவர்கள்.
தமிழ்நாட்டிலிருந்து அதிகளவில் குடிமைப்பணி அதிகாரிகளை உருவாக்கி தந்த பெருமைக்குரியவர். சைதை துரைசாமி, சென்னை மாநகர மேயராக இருந்தபோது சென்னையின் பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிகோலியவர். அப்படிப்பட்ட மாமனிதருக்கு நிகழ்ந்துள்ள இத்துயரச் சூழல் மனதை மிகவும் கனக்கச் செய்கிறது. இதிலிருந்து ஐயா துரைசாமி அவர்களும், அவரது குடும்பத்தினரும் உறுதியான மனத்திடத்துடன் மீண்டுவர வேண்டும்.
தம்பி வெற்றி இன்னமும் ஏதோ ஓர் இடத்தில் நலமோடு இருக்கிறார், விரைவில் திரும்பி வந்துவிடுவார் என்பதே என் விருப்பமாக இருக்கிறது. மகன் நிலை அறியாது தவித்திருக்கும் ஐயா சைதை துரைசாமி அவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் துயரத்தில் பங்கேற்று என் ஆறுதலைத் தெரிவிக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.