நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளை அறிக்கை மீதான விவாதம் நடந்தது. இந்த வேளையில் பிரதமர் மோடி மத்திய இணையமைச்சர் எல் முருகன் உள்பட 8 எம்பிக்களுக்கு தண்டனை அளிப்பதாக கூறி அழைத்து சென்று அவர்களுடன் சேர்ந்து ‛லஞ்ச்’ சாப்பிட்டார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 31ம் தேதி தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் அன்றைய நாளில் ஜனாதிபதி திரெளபதி முர்மு உரையாற்றினார். அதன்பிறகு பிப்ரவரி 1ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதையடுத்து தொடர்ந்து நாடாளுமன்ற கூட்டம் நடந்து வருகிறது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. மத்திய அரசு தென்இந்திய மாநிலங்களுக்கு நிதி பகிர்வை குறைத்துள்ளதாக கூறி தமிழகம், கர்நாடகா, கேரளா எம்பிக்கள் குற்றம்சுமர்த்தி போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றன. இவர்களின் கேள்விகளுக்கு மத்திய அமைச்சர்கள், பாஜக எம்பிக்கள் பதிலடி கொடுத்து வருகின்றன.
இந்நிலையில் தான் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள சூழலில் மத்திய அரசு சார்பில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. முந்தைய காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் நிதி கையாண்டது தொடர்பான தகவல்களுடன் இந்த அறிக்கை சமர்பிக்கப்பட்டது. இந்த வெள்ளை அறிக்கை மீதான விவாதம் இன்று நடந்தது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்து வந்தபோது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டன. அமளிக்கு நடுவே நிர்மலா சீதாராமன் உரையாற்றினார்.
இந்த வேளையில் பிரதமர் மோடி இன்று நாடாளுமன்றத்தில் 8 எம்பிக்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுத்தார். அதாவது மதியம் 2.30 மணியளவில் மத்திய இணையமைச்சர் எல் முருகன் உள்பட 8 எம்பிக்களுக்கு போன் செய்யப்பட்டது. பிரதமர் மோடி உங்களை அழைக்கிறார் என தகவல் தெரிவிக்கப்பட்டது. அதாவது பாஜக எம்பிக்களான ஹினா காவிட், எஸ் பாங்னான் கொன்யாக், ஜாம்யாங் செரிங் நம்கியால், எல் முருகன், தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த எம்பி ராம்மோகன் நாயுடு, பகுஜன் சமாஜ் கட்சியின் எம்பி ரித்தேஷ் பாண்டே, பிஜு ஜனதாதளம் கட்சியை சேர்ந்த சஸ்மித் பத்ரா உள்ளிட்ட 8 பேருக்கு போன் சென்றது. இதையடுத்து அவர்கள் பிரதமர் மோடியை சந்திக்க சென்றனர். பிரதமர் மோடியை அவர்கள் சந்தித்தனர். இந்த வேளையில் பிரதமர் மோடி, ‛‛உங்களுக்கு ஒரு தண்டனை தரப்போகிறேன்” எனக்கூறியுள்ளார். இதை கேட்டவுடன் எம்பிக்கள் அதிர்ச்சியடைந் நிலையில் அடுத்த சில வினாடிகள் சிரித்த பிரதமர் மோடி அவர்கள் அனைவரையும் நாடாளுமன்றத்தின் கேன்டீனுக்கு அழைத்து சென்று லஞ்ச் சாப்பிட்டார். பிரதமர் மோடியுடன் எம்பிக்கள் ஜாலியாக பேசிக்கொண்டு லஞ்ச் சாப்பிட்டனர். இந்த வேளையில் பிரதமர் மோடி தனன்னை பற்றிய சுவாரசிய விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும் எப்போதும் ஆக்டிவ்வாக இருப்பது மற்றும் வெளிநாடு பயணங்கள் குறித்த விஷயங்கள் பற்றியும் எம்பிக்கள் கேட்க கேட்க பிரதமர் மோடி பதிலளித்துள்ளார்.
இந்நிலையில் தான் பிரதமர் மோடியுடன் சேர்ந்து உணவு சாப்பிட்ட அனுபவம் குறித்து மத்திய இணையமைச்சர் எல். முருகன் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‛‛பிரதமர் மோடி வடகிழக்கு மாநிலம், தென்மாநிலங்கள் உள்பட கட்சி பாகுபாடு இன்றி 8 எம்பிக்களை அழைத்து எங்களுடன் நாடாளுமன்ற கேன்டீனில் லஞ்ச் சாப்பிட்டார். இது சிறந்த அனுபவமாக இருந்தது. பாஜக மட்டுமின்றி பிற கட்சிகளின் எம்பிக்களும் பங்கேற்றனர். இந்த வேளையில் பிரதமர் மோடி தனது தினசரி பழக்க வழக்கங்கள் பற்றி பேசினார். 45 நிமிடங்களில் பிரதமர் மோடியிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டோம். மேலும் அது உத்வேகம் அளிக்கும் வகையில் உள்ளது. பிரதமர் மோடி தினமும் மூன்றரை மணிநேரம் மட்டுமே தூங்குவதாக தெரிவித்தார். அதோடு மாலை 6 மணிக்கு பிறகு உணவுகள் எடுத்து கொள்வது இல்லை என்றும் எங்களிடம் தெரிவித்தார்” என எல் முருகன் கூறியுள்ளார்.