மீனவர் பிரச்னை: திமுக எம்பிக்கள் வெளிநடப்பு!

நாடாளுமன்றத்தில் இன்றைய பட்ஜெட் கூட்டத்தொடரில் ராமர் கோயில் குறித்து விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தமிழக மீனவர்கள் குறித்து விவாதிக்க லோக்சபாவில் திமுக எம்பிக்கள் வலியுறுதினர். ஆனால் சபாநாயகர் அனுமதி மறுத்ததால் திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

விரைவில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 1ம் தேதி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ள பேரிடருக்கான நிதியை வழங்கவில்லை என திமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக சம்பவம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் நாடாளுமன்றத்தில் இன்றைய பட்ஜெட் கூட்டத்தொடரில் ராமர் கோயில் குறித்து விவாதிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. ராமர் கோயில் தொடர்பான ‘நன்றி தெரிவிக்கும் தீர்மானம்’ நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. விதி 193ன் கீழ் இந்த தீர்மானம் தாக்கல் செய்யப்படுகிறது. மக்களவையில், பாஜக எம்பிக்கள் சத்ய பால் சிங், பிரதாப் சந்திர சாரங்கி மற்றும் சந்தோஷ் பாண்டே ஆகியோர் முன்மொழிகிறார்கள். மாநிலங்களவையில், இந்த தீர்மானம் விதி 176ன் கீழ் பாஜக எம்.பி.க்கள் கே.லக்ஷ்மன், சுதன்ஷு திரிவேதி மற்றும் ராகேஷ் சின்ஹா​​ஆகியோரால் தாக்கல் செய்யப்படும். தீர்மானத்தில் ‘ராமர், இந்தியா மற்றும் இந்தியத்தன்மையின் சின்னம்’, ‘ராமர், இந்திய கலாச்சாரத்தின் சின்னம்’, ‘ராமர், ஒரே தேசம், வலிமையான தேசம் என்பதன் அடையாளம்’ என மூன்று அம்சங்கள் இருக்கும். இந்த தீர்மானத்திற்காகவே பட்ஜெட் கூட்டத்தொடர் மேலும் ஒரு நாள் நீடிக்கப்பட்டிருக்கிறது. பிப்ரவரி 9ம் தேதியுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைய இருந்த நிலையில், ஒரு நாள் நீடிக்கப்பட்டு பிப்ரவரி 10ம் தேதியுடன் கூட்டத்தொடர் நிறைவுறுகிறது.

முன்னதான பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி “2024 ஆம் ஆண்டிற்கு உங்கள் அனைவருக்கும் ‘ராம் ராம்’ வாழ்த்துக்கள்” என கூறியிருந்தார். இதனை தொடர்ந்து குடியரசுத் தலைவர் உரையிலும் ராமர் கோயில் குறித்து இடம்பெற்றிருந்தது. இன்றைய தினம் ராமர் கோயில் குறித்து தீர்மானம் கொண்டுவரப்பட இருப்பதால் அனைத்து எம்பிக்களும் நாடாளுமன்றத்திற்கு வர வேண்டும் என்று பாஜக தனது எம்பிக்களுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இன்று லோக்சாப தொடங்கியபோது தமிழக மீனவர்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று திமுக எம்பிக்கள் வலியுறுத்தினர். தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில், இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்கள் மற்றும் அவர்களது மீன்பிடிப் படகுகளை விடுவித்திடவும், மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காண கூட்டு நடவடிக்கைக் குழுவினைப் புதுப்பித்திடவும் உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டு, பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். இதன் தொடர்ச்சியாகவே இன்று லோக்சபாவில் திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு குரல் எழுப்பினார். ஆனால் இதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்ததால் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். அதேபோல ராஜ்யசபாவில், தமிழகத்திற்கான வெள்ள நிவாரணம் குறித்து கேள்வி எழுப்பி அவையிலிருந்து திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.