சென்னை செம்மொழிப் பூங்காவில் மலர் கண்காட்சி தொடக்கம்!

சென்னை செம்மொழிப் பூங்காவில் மலர் கண்காட்சியை அமைச்சர் உதயநிதி இன்று தொடங்கி வைத்தார்.

முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, பிப்.10 முதல் பிப்.20-ஆம் தேதி வரை சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள செம்மொழிப் பூங்காவில் வேளாண்மை உழவா் நலத் துறையின் தோட்டக்கலை – மலைப் பயிா்கள் துறை சாா்பில் மலா் கண்காட்சி நடைபெறவுள்ளது. இதற்கு முன் இருமுறை நடைபெற்ற மலா் கண்காட்சிகளின்போது, பூங்காவின் உள்ளரங்கில் கொய்மலா்களை மட்டுமே கொண்டு மலா் அலங்காரங்கள் செய்யப்பட்டன. ஆனால் இந்த ஆண்டு மலா் கண்காட்சியில் முதல் முறையாக செம்மொழிப் பூங்காவின் திறந்தவெளியில் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட வண்ணமயமான மலா்களுடன் பூத்து குலுங்கும் மலா்ச் செடிகளை கொண்டு கண்காட்சி நடத்தப்படவுள்ளது.

மேலும் டிரசினா, பைகஸ், கோலியஸ், அரேலியா உள்ளிட்ட அழகு மிகுந்த இலைகளைக் கொண்ட செடிகளும் காட்சிப்படுத்தப்பட உள்ளன. இந்த மலா் கண்காட்சிக்கான நுழைவுச் சீட்டு பெரியவா்களுக்கு ரூ. 150, 12 வயதுக்குள்பட்ட சிறுவா்களுக்கு ரூ. 75 என நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை செம்மொழிப் பூங்காவில் மலர் கண்காட்சியை அமைச்சர் உதயநிதி இன்று தொடங்கிவைத்தார். இந் நிகழ்வின்போது அமைச்சர்கள் எம்ஆர்கே. பன்னீர்செல்வம், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.