மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி: ஜான்பாண்டியன் நடத்திய உட்கட்சி தேர்தல்!

மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என ஜான் பாண்டியன் கட்சி நேற்று ஆலோசனை நடத்தியது.

சென்னையில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக செயற்குழு கூட்டம் நிறுவனத் தலைவர் பெ. ஜான் பாண்டியன் தலைமையில் நடந்தது. மகளிரணித் தலைவர் வினோலின் நிவேதா பாண்டியன் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் யாருடன் கூட்டணி அமைக்கலாம் என்பது தொடர்பாக நிர்வாகிகள் மத்தியில் ஓட்டெடுப்பு நடந்தது. இதன்படி தயாரிக்கப்பட்ட வாக்குச் சீட்டில் யாருடன் கூட்டணி, அதற்கான காரணம் குறித்து பதிவு செய்து வாக்குப் பெட்டியில் போட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் ஜான் பாண்டியன் கூறும் போது, “கூட்டணியை முடிவு செய்யும் அதிகாரம் எனக்கு வழங்கப்பட்டுள்ளது. வாக்குச்சீட்டு வாயிலாக நிர்வாகிகளிடம் கருத்து கேட்டுள்ளோம். இதனை பரிசீலிக்க உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து கட்சி சார்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. மக்களவைத் தேர்தலில் சாதகமான 5 தொகுதிகளைத் தேர்வு செய்து வைத்துள்ளோம். எத்தனை தொகுதி என்பதை பேச்சு வார்த்தையின் போது தெரிவிப்போம். அங்கீகாரம் கொடுக்கும் அரசியல் கட்சியுடன் இணைந்து பயணிப்போம். சூழ்நிலையை பொருத்து நான் தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு செய்யப்படும்” என்றார்.