தமாகா செயற்குழு கூட்டம் சென்னையில் நாளை நடைபெறுகிறது: ஜி.கே.வாசன்!

தமாகா செயற்குழு கூட்டம் சென்னையில் நாளை நடைபெறுகிறது. இதில் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் மாவட்ட வாரிய கட்சியின் பலம் அறிய திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் பாஜகவை வளர்த்தெடுக்க அதிமுகவுடன் கூட்டணி அமைத்து மக்களவை தேர்தலை எதிர்கொள்ள விரும்புகிறது. ஆனால் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியோ, பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதில் திட்டவட்டமாக இருக்கிறார். அதனால் அனைத்து கட்சிகளுடனும் மென்மையான போக்கை கடைபிடித்து வரும் தமாகா தலைவர் ஜி.கே. வாசனை பாஜக தூது அனுப்பி அதிமுகவை கூட்டணிக்கு அச்சாரமிடுவதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

தமிழகத்தில் மோடி, அமித் ஷாவுக்கு நெருக்கமான நபராக கருதப்படும் வாசன், தமிழகத்தில் தனது கட்சியின் பலத்தை அறிய திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக நாளை ( பிப்.12 ) சென்னையில் தமாகா செயற்குழு கூட்டம் நடக்கும் என வாசன் தெரிவித்துள்ளார். கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள், மாநில செயற் குழு உறுப்பினர்கள் மற்றும் மாநில துணை அமைப்பு தலைவர்கள் பங்கேற்கும் இக்கூட்டத்தில் கூட்டணி தொடர்பாகவும் விவாதிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக மாவட்ட அளவில் தமாகா எவ்வளவு பலம் பெற்றுள்ளது என்பது குறித்து விவாதிக்க இருப்பதாகவும், அதன் அடிப்படையில் கூட்டணி கட்சிகளிடம் தொகுதிகளை கேட்டு பெறுவது என்றும் முடிவெடுத்து இருப்பதாகக் கூறப்படுகிறது.