தேர்தல் ஆணையம் எனது கட்சியை பறித்துவிட்டது: சரத் பவார்

எனது கட்சியை தேர்தல் ஆணையம் பறித்துவிட்டது என்று சரத் பவார் குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த 1999-ம் ஆண்டில் அப்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எதிராக சரத் பவார் போர்க்கொடி உயர்த்தினார். அதே ஆண்டு ஜூன் 10-ம் தேதி தேசியவாத காங்கிரஸ் கட்சியை அவர் தொடங்கினார். கடந்த ஜூலையில் சரத் பவாருக்கு எதிராக அவரது அண்ணன் மகன் அஜித் பவார் போர்க்கொடி உயர்த்தினார். கட்சியின் 53 எம்எல்ஏக்களில் 40 பேருடன் பாஜக கூட்டணி அரசில் அஜித் பவார் இணைந்து மகாராஷ்டிராவின் துணை முதல்வராக பதவியேற்றார். இதைத் தொடர்ந்து தேசியவாத கட்சியின் பெயர், சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் முறையிடப்பட்டது. இதில் அஜித் பவார் அணியே உண்மையான தேசியவாத காங்கிரஸ் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது.

சரத் பவார் அணிக்கு ‘தேசியவாத காங்கிரஸ் – சரத் சந்திர பவார்’ என்று புதிய பெயர் சூட்டப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக சரத் பவார் கூறியதாவது:-

நான் தொடங்கிய கட்சியை என்னிடம் இருந்து தேர்தல் ஆணையம் பறித்துவிட்டது. ஆணையத்தின் முடிவை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று உறுதியாக நம்புகிறேன். இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு உள்ளேன். என்னைப் பொறுத்தவரை கொள்கைகளே முக்கியம் என்று கருதுகிறேன். கட்சி சின்னம் என்பது குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே நிலைத்திருக்கும். இவ்வாறு சரத் பவார் தெரிவித்துள்ளார்.