“தமிழக அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கைக் கடைபிடிக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இது குறித்து கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
தமிழக சட்டப்பேரவையின் ஆளுநர் உரையுடன் கூடும் 2024-ன் முதல் கூட்டத் தொடரில் மாநில அரசின் கொள்கை குறிப்பை படிக்க மறுத்து, அரசியல் உள்நோக்கத்துடன் வெளிநடப்பு செய்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கையினை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
ஆளுநர் உரை என்பது ஆளுநரின் தனிப்பட்ட கருத்துக்களின் தொகுப்பு அல்ல. அவரின் சொந்தக் கருத்துக்களை கூற சட்டப்பேரவை இடமும் அல்ல. ஆளுநர் ஆர்.என். ரவி, தேசியகீதத்தை முதலில் பாட வேண்டுமென்று ஏற்கெனவே கோரிக்கை விடுத்ததாகவும், அதற்கு தீர்வு இல்லை என்றும், உரையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்களுடன் முரண்படுகிறேன் என்றும் கூறி கேரள ஆளுநர் பாணியில் 2 நிமிடங்களில் உரையை முடித்துக் கொண்டார்.
இந்நிலையில் பேரவை தலைவர், ஆளுநர் உரையை தமிழில் முழுவதும் வாசித்து நிறைவு செய்து விட்டு, தேசிய கீதம் இசைப்பது தொடர்பாக ஆளுநர் ரவிக்கு ஏற்கெனவே கடிதம் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்று பதில் அளிக்கும் போது, ஆளுநர் ரவி கிஞ்சிற்றும் நாகரீகம் இல்லாமல், கடந்த ஆண்டைப் போலவே, தேசிய கீதம் இசைக்கும் முன்பே வெளியேறிச் சென்றது அரசியல் சாசனத்தை மீறிய செயலாகும். இதன் மூலம் தமிழக சட்டமன்றத்தையும் தமிழக மக்களையும் ஆளுநர் அவமதித்துள்ளார். இது கடும் கண்டனத்துக்குரியது.
தேசிய கீதத்தை ஆளுநர் அவமரியாதை செய்தார் என்பதும் தெளிவாக வெளிப்பட்டது. தமிழகத்தின் மாண்பையும், சட்டமன்றத்தின் மரபையும் நிலைநிறுத்தும் வகையில் அமைச்சரவை தயாரித்த முழு உரையும் அவைக்குறிப்பில் ஏற்றப்படும் என்று உடனடியாக அவை முன்னவர் நடவடிக்கை மேற்கொண்டது ஆளுநருக்கு அளிக்கப்பட்ட தகுந்த பதிலடியாக அமைந்தது.
அரசமைப்பு சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடந்து கொள்ள வேண்டிய ஆளுநர், ஆர்எஸ்எஸ்-ன் தொண்டராக செயல்படுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். தமிழக அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கைக் கடைபிடிக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. ஆளுநரின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கும், தமிழக விரோதப் போக்குக்கும் எதிராக தமிழக மக்களும், ஜனநாயக சக்திகளும் தங்களது வலுவான கண்டன குரலை எழுப்பிட வேண்டுமென மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.