தென் மாநில ஆளுநர்கள் திருவிளையாடல் நடத்துகிறார்கள்: அமைச்சர் ரகுபதி

“தென் மாநில ஆளுநர்களின் திருவிளையாடல் எல்லாம் அந்தந்த மாநில அரசுகளுக்கு எதிராக அமைந்திருக்கின்றன. இதையெல்லாம் இந்திய மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியதாவது:-

கேரள ஆளுநர் இரண்டு வார்த்தை பேசிவிட்டு வெளிநடப்பு செய்தார். தமிழக ஆளுநர் அரசின் உரையில் இருந்து ஒருவார்த்தை கூட பேசாமல், சொந்தமாக சில கருத்துகளை கூறிவிட்டு அமர்ந்துவிட்டார். தேசிய கீதம் முதலில் இசைக்கப்படவில்லை என்கிறார். முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதமும் இசைக்கப்படுவதுதான் நமது மரபு என்பதை கடந்தாண்டே சபாநாயகர் அப்பாவு விளக்கமாக எடுத்துச் சொல்லிவிட்டார்.

தென் மாநில ஆளுநர்களின் திருவிளையாடல் எல்லாம் அந்தந்த மாநில அரசுகளுக்கு எதிராக அமைந்திருக்கின்றன. இதையெல்லாம் இந்திய மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வட மாநிலங்களிலும் இண்டியா கூட்டணிக்கு வலிமையை உருவாக்கும் வண்ணம் ஆளுநர்களின் நடவடிக்கைகள் இருந்து வருகின்றன. ஜனநாயகத்தை கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

தனக்கு எழுதிக்கொடுத்த உரையில் எதாவது சந்தேகம் இருந்தால் ஆளுநர் கேட்டிருக்கலாம். அப்படி கேட்டால் விளக்கம் சொல்ல தயாராக உள்ளோம். தமிழ்நாடு அனைத்திலும் முதலிடத்தில் இருக்கிறது என்பதை புள்ளி விவரங்களோடு சொல்லும்போது அதனை ஏற்றுக்கொள்ளும் அதை ஏற்றுக்கொள்கிற மனப்பக்குவம், அதை தாங்கிக் கொள்கின்ற சக்தி ஆளுநருக்கு இல்லை என்பதைதான் இது காட்டுகிறது.

தமிழகம் இன்றைக்கு இந்திய ஒன்றியத்தில் பல்வேறு துறைகளில் முதலிடத்தில் இருக்கிறது. இதையெல்லாம் ஆளுநர் உரையில் சுட்டிக்காட்டியுள்ளோம். அதை ஏற்றுக்கொள்ள மனமில்லாமல், படிக்க மனமில்லாமல், இந்த அரசின் சாதனைகளை வாசிக்க விருப்பமில்லாமல் பொய்யான கருத்துக்களை பரப்பியுள்ளார். அதனால் தான் இன்றைக்கு இந்த பிரச்சினைகள் எல்லாம் எழுந்திருக்கிறது.

அரசு எழுதிக்கொடுத்த உரையை ஒப்புக்கொண்டுதான் வந்தார். மனசாட்சிக்கு விரோதமாக இருந்தால் வராமல் இருந்திருக்கலாம். கருத்து வேறுபாடுகள் இருப்பினும், ஆளுநர் என்கிற அந்தப் பதவிக்கு உரிய மரியாதையை கொடுக்க வேண்டும் என்று மதிப்பு கொடுக்க கூடிய முதல்வர் தமிழகத்தில் இருக்கிறார் என்கிற காரணத்தால் தான் இன்றைக்கு இத்தகைய நிகழ்வுகளை எல்லாம் நாம் தாங்கிக் கொண்டிருக்கிறோம்.

தேசிய கீதம் இசைக்க வேண்டும் என்று சொன்ன ஆளுநர், சபாநாயகர் உரையை முழுமையாக படிக்கும்வரை அங்கேயே இருந்தார். எனினும், இன்னும் இரண்டு நிமிடம் பொறுத்திருக்காமல் தேசிய கீதத்தை மதிக்காமல், தனக்கான உரிய மரியாதையை ஏற்காமல் வேகமாக சென்றுவிட்டார். சபாநாயகர் குறிப்பிட்ட சவர்க்கர், கோட்சே வார்த்தைகள் அவைகுறிப்பில் இடம்பெறாது என்று சபாநாயகரே தெரிவித்துவிட்டார்.

ஒன்றிய அரசுக்கு எதிரான அரசுகள் ஆட்சிபுரியும் மாநிலங்களை இதுமாதிரி ஆளுநர்கள் மூலம் குறிவைத்து அசிங்கப்படுத்துகிற சூழலை உருவாக்குகிறார்கள். ஆனால் மக்கள் அப்படிச் செய்ய விட மாட்டார்கள். எங்களை யார் அசிங்கப்படுத்த நினைக்கிறார்களோ அவர்களை மக்கள் அசிங்கப்படுத்துவார்கள். முன்பு, தெலங்கானா அரசு ஆளுநர் உரை இல்லாமல் செய்தது. நாங்களும் நினைத்திருந்தால் அப்படி செய்திருக்கலாம். ஆனால், ‘ஆளுநருக்கு மரியாதையை கொடுத்து அந்த உரையோடு தொடங்க வேண்டும். ஜனநாயகத்தில் நாம் நம்பிக்கை உள்ளவர்கள்’ என்று தமிழக முதல்வர் சொன்னதன் காரணமாக ஆளுநர் உரையோடு தொடங்கப்பட்டது. சுமுகமான சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்றுதான் நாங்கள் நினைத்தோம். ஆனால், ஆளுநர்கள் எல்லாம் ரிமோட் மூலம் இயக்கப்படுகிறார்கள். ரிமோட்டை இயக்குபவர்கள் எப்படி இயக்குகிறார்களோ அதுபடி தான் ஆளுநர் இயங்க முடியும். அவரால் சுயேட்சையாக இயங்க முடியாது.

அதிமுக ஆட்சியில், ஆளுநரின் உரையில் ஜெயலலிதா புகழ் பாடப்பட்டிருக்கும். அதையெல்லாம் ஆளுநர் வாசித்திருப்பார். ஆனால் இந்த ஆட்சியின் ஆளுநர் உரையில் இந்த அரசாங்கம் என்றே பெரும்பாலும் குறிப்பிடப்பட்டிருக்கும். முதல்வர் பெயரே மூன்று இடங்களில் தான் இருக்கும். அப்படியிருக்கிற இந்த உரையை படிக்க ஆளுநருக்கு மனமில்லை. நாங்கள் மரியாதையுடன் ஆளுநரை அழைத்தோம். ஆனால் ஆளுநர் அந்த மரியாதையை காப்பாற்றிக் கொள்ளவில்லை என்பதை இன்றைய சட்டப்பேரவை நிகழ்வைக் கொண்டு ஆளுநர் தொடர்பான வழக்கில் எங்கள் வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் எடுத்துரைப்பார்கள்.

அதிமுக ஆட்சிக்கு நடந்தபோது அவர்களுக்கு டெல்லி அன்று சாதகமாக இருந்தது. நினைத்ததை சாதித்து கொண்டு இருந்தார்கள். ஆனால் எங்களை பொறுத்தவரைக்கும், ஒன்றிய அரசிற்கு எதிராக இருக்கின்ற காரணத்தினால், சாதகமான சூழ்நிலை இல்லை என்றாலும்கூட, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆளுநரோடு அனுசரித்து செல்ல வேண்டும் என்று நினைத்தார், ஆனால் ஆளுநர் போக விரும்பவில்லை. அதற்கு நாங்கள் என்ன செய்யமுடியும். தமிழகத்தில் தான் அமைதி நிலவுகின்றது, மதநல்லிணக்கம் நிலவுகின்றது. தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது. எனவே, வெளிநாட்டிலிருந்து தொழில் முதலீட்டாளர்கள் அதிக அளவில் வருகின்ற முதல் மாநிலமாக தமிழ்நாட்டை முதல்வர் உருவாக்கி இருக்கின்றார் என்றால், அதற்கு இங்கு நிலவுகின்ற அமைதியான சூழ்நிலை தான் காரணம். இவ்வாறு அவர் கூறினார்.