“இனி உங்களுக்கு பதிலாக உங்கள் மருமகனாகிய நான், மோடிக்கு எதிராக கொடியேந்துவேன்” என்று ராஷ்ட்ரிய ஜனதா தள எம்எல்ஏ தேஜஸ்வி யாதவ் கூறினார்.
பிகார் சட்டப்பேரவையில் இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ் குமார் அரசு வெற்றி பெற்றுள்ளது. நிதிஷ்குமார் அரசுக்கு 129 எம்எல்ஏக்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர். அதேநேரம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் இடது முன்னணி ஆகிய எதிர்க்கட்சிகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்தனர்.
வாக்கெடுப்புக்கு முன்னதாக, ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சி எம்எல்ஏவும், பிகார் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் சட்டப்பேரவையில் பேசினார். அவையில் தேஜஸ்வி பேசியதாவது:-
நாங்கள் உங்களை ஒரு குடும்ப உறுப்பினராக நினைத்தோம். நீங்கள் முன்பு பாஜகவை எதிர்த்து போர்க்கொடி தூக்கினீர்கள். இப்போது அவர்களைப் புகழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். இப்போதாவது பிரதமர் மோடி நீங்கள் அணி மாறமாட்டீர்கள் என்று உத்தரவாதம் கொடுக்க இயலுமா எனத் தெரியவில்லை. இருக்கட்டும், நீங்கள் மோடிக்கு எதிராக உயர்த்திய கொடியை இனி உங்கள் மருமகனாகிய நான் ஏந்துவேன்.
ஐக்கிய ஜனதா தள எம்எல்ஏ.க்களுக்காக நான் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். அவர்கள் இன்னொரு முறை மக்களை சந்திக்கும்போது அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்பதை உணர்ந்திருக்கிறார்களா? அவர்கள் உங்களிடம் “ஏன் நிதிஷ் குமார் மூன்று முறை பதவியேற்றார்” என வினவினால் நீங்கள் என்ன சொல்வீர்கள். அன்று மோடியை விமர்சித்தீர்கள், இன்று புகழ்கிறீர்களே எனவும் கேட்பார்கள். அதற்கு என்ன பதில் சொல்வீர்கள்.
எதுவாக இருப்பினும் நாங்கள் முதல்வர் நிதிஷ் குமாருக்கு உரிய மரியாதையை செலுத்துவோம். ஆனால் ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தை தொடர்ந்து எதிர்ப்போம். பிகார் முதல்வராக 9 முறை பதவியேற்றதற்காக நிதிஷ்குமாருக்கு நன்றி. இவ்வாறு அவர் பேசினார்.