ஆர்.என்.ரவி என்றைக்கு வெளியேறுகிறாரோ அந்த நாள்தான் தமிழகத்தின் நல்ல நாள்: கே.எஸ்.அழகிரி

“ஆளுநர் மாளிகையிலிருந்து ஆர்.என்.ரவி என்றைக்கு வெளியேறுகிறாரோ அந்த நாள்தான் தமிழகத்தின் நல்ல நாளாகக் கருதப்பட வேண்டும்” என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

இது தொடர்பாக கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

தமிழக சட்டப்பேரவையில் இந்த நடப்பாண்டின் முதல் கூட்டத் தொடர் ஆளுநர் உரையோடு தொடங்க வேண்டும் என்ற மரபின் அடிப்படையில், ஆளுநர் ஆர்.என். ரவி அழைக்கப்பட்டிருந்தார். ஆளுநர் உரையும், அவருக்கு முன்கூட்டியே வழங்கப்பட்டு ஒப்புதலும் பெறப்பட்டது. ஆனால், உரையாற்றுவதற்கு சட்டப்பேரவைக்கு வந்த அவர், தமது உரைக்கு பிறகு தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பாகவே வெளிநடப்பு செய்தது மிகுந்த கண்டனத்துக்குரியது.

சட்டப்பேரவைக்கு அவரை அழைத்து வரும்போது தேசிய கீதம் இசை வடிவில் ஒலிபரப்பப்பட்டு, முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடக்கத்தில் முறைப்படி தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. உரை முடிந்து இறுதியில் தான் தேசியகீதம் பாடப்படும். அந்த மரபுக்கு மாறாக, தமிழக ஆளுநர் நடந்து கொண்டது தேசிய கீதத்தையே அவமதிக்கிற செயலாகும்.

தமிழக ஆளுநரை பொறுத்தவரை நியமிக்கப்பட்டது முதற்கொண்டு, அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமாகவும், தமிழக நலன்களுக்கு எதிராகவும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். அவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக ஆட்சிக்கு எதிராக பல நிகழ்ச்சிகளை ஆளுநர் மாளிகையில் நடத்திக் கொண்டு, சர்ச்சைக்குரிய கருத்துகளையும் வெளியிட்டு வருகிறார். மகாத்மா காந்தியில் தொடங்கி எவரையும் அவர் விட்டு வைக்கவில்லை. அவரது நடவடிக்கைகளை பார்க்கிற போது, ஆளுநர் பதவிக்கே ஒரு அவமானச் சின்னமாக திகழ்கிறார்.

ஆளுநர் மாளிகையிலிருந்து அவர் என்றைக்கு வெளியேறுகிறாரோ அந்த நாள் தான் தமிழகத்தின் நன்னாளாகக் கருதப்பட வேண்டும். அந்த அளவுக்கு தமிழக மக்களின் வெறுப்புக்கும், கசப்புக்கும் ஆளாகியிருக்கிற ஆளுநரின் நடவடிக்கைகளுக்கு பாடம் கற்பிக்கிற வகையில், தமிழகத்தில் பாஜகவை மக்கள் வெறுப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏதோவொரு வகையில் ஆளுநரின் நடவடிக்கைகளினால் ஏற்படுகிற எதிர்ப்பில் தமிழக பாஜக கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது. இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் ஆளுநர் மீது தமிழக மக்களுக்கு கடும் வெறுப்புதான் அதிகரித்து வருகிறது. எனவே, தமிழக ஆளுநரின் அரசமைப்புச் சட்ட விரோத நடவடிக்கைகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். இவ்வாறு கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.