டெல்லி சலோ போராட்டத்தை கையில் எடுத்து இருக்கும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் செல்போன் டவரில் ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் இன்று டெல்லி சலோ என்ற பெயரில் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கி இருக்கிறார்கள். 2 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற 3 வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டத்தை போன்றே விவசாயிகள் பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து டிராக்டர்களில் டெல்லி பவானா மைதான போராட்டக் களத்துக்கு சென்றனர். இவர்களை தடுக்க மத்திய அரசும், மாநிலங்களிலும் ஆளும் பாஜக அரசுகளும் சாலைகளில் ஆணி வேகத் தடைகள், சாலைத் தடுப்புகள் அமைத்து இருக்கிறார்கள். அதையும் மீறி உள்ளே செல்லும் விவசாயிகளை போலீசார் தடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் திருச்சியில் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் “டெல்லி சலோ” போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் திருச்சியைச் சேர்ந்த விவசாயிகள் மனித எலும்புக்கூடுகளைப் பிடித்துக் கொண்டு சாலையில் படுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சில விவசாயிகள் செல்போன் டவரில் ஏறி நின்று டெல்லி சலோ போராட்டத்துக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். இது குறித்து விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு கூறுகையில், “அரசியலமைப்பு சட்டப்படி, எங்கள் உரிமைகளுக்காக நாங்கள் நாட்டிற்குள் சுதந்திரமாக எங்கும் செல்ல முடியும். ஆனால் போலீசார் விவசாயிகள் டெல்லியில் போராட அனுமதி மறுக்கின்றனர். வரும் தேர்தலில் பிரதமர் மோடி தமிழ்நாட்டின் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும், அந்த தொகுதியில் விவசாயிகள் அவரை எதிர்த்து வேட்புமனு தாக்கல் செய்வார்கள்” என்று தெரிவித்தார்.