சம்சாரம் இல்லாமல் என்னால் வாழ முடியாதுப்பா: அமைச்சர் தங்கம் தென்னரசு!

மின்சார தேவை பற்றிய விவாதத்தின்போது, சம்சாரம் – மின்சாரம் இல்லாமல் வாழ முடியுமா என்பது பற்றியும் சுவாரஸ்யமாக பேசப்பட்டதால் அவையில் சிரிப்பலை எழுந்தது.

தமிழக சட்டசபையின் 2வது நாள் கூட்டம் இன்று (பிப்.,13) நடைபெற்றது. அப்போது மின்சார தேவை குறித்த விவாதத்தின்போது பா.ம.க எம்எல்ஏ ஜி.கே.மணி, ”சம்சாரம் இல்லாமல் மனிதன் வாழலாம், மின்சாரம் இல்லாமல் வாழ முடியாது. கருவறையில் இருந்து கல்லறை வரை மின் பயன்பாடு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் மின் தேவை 17 ஆயிரம் மெகா வாட் ஆக இருக்கையில் மின் உற்பத்தி 16 ஆயிரத்து 915 மெகா வாட் ஆக தான் உள்ளது. மீதியிருப்பதை வெளியில் தான் வாங்குகிறோம்” எனக் கூறினார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், ”எம்எல்ஏ ஜி.கே.மணி, மின்சாரத்தின் தேவையை சிறப்பாக வலியுறுத்தியுள்ளார். துவக்கத்தில் சம்சாரம் இல்லாமல் இருந்துவிடலாம் எனக் கூறினார். அதனை இங்கிருப்பவர்களில் எத்தனை பேர் ஏற்றுக்கொள்வார்கள் எனத் தெரியவில்லை. ஆனால் நான் அதை உறுதியாக ஏற்றுக்கொள்வதில்லை எனத் தெளிவுப்படுத்துகிறேன்” என்றார். அப்போது அவையில் எம்எல்ஏ.,க்கள் அனைவரும் சிரிப்பலையில் மூழ்கினர்.