தமிழக சட்டப்பேரவையில் தேசிய கீதம் பாடியிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் இருந்தது சரியல்ல. இந்த விவகாரத்தில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் செய்தது தவறு என்று புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
புதுச்சேரியில் நேற்று மாலை செய்தியாளர்களிடம் ஆளுநர் தமிழிசை கூறியதாவது:-
தமிழகத்தில் பேரவைத் தலைவரின் நடவடிக்கை தவறு. உரையின் தமிழாக்கத்தை அவர் வாசித்துள்ளார். முடிந்தவுடன் தேசிய கீதம் பாடியிருக்க வேண்டும். அதுதான் முறை. அதற்குப் பிறகு சில கருத்துகளை அவர் கூறியிருக்கக் கூடாது. தேசிய கீதம் இசைப்பதை ஆளுநர் எதிர்பார்த்திருந்தார். நானும் அதைத்தான் எதிர்பார்த்திருந்தேன்.
தெலங்கானாவில் ஆளுநர் உரையை தராததால், அந்தஆட்சியை வீட்டுக்கு அனுப்பிஉள்ளனர். இதை தமிழக பேரவைத் தலைவர், அமைச்சர் ரகுபதி ஆகியோர் உணர வேண்டும். தெலங்கானாவில் புதிய ஆட்சியில் 45 நாட்களில் இரு ஆளுநர் உரையை வாசித்துள்ளேன்.
தமிழக அரசு எதையும் சரியாகச் செய்வதில்லை. கிளாம்பாக்கம் பேருந்து நிலைய விவகாரம் இதற்கு உதாரணம். எதுவாக இருந்தாலும், நாங்கள் இப்படித்தான் செயல்படுவோம், கேள்வியே கேட்கக்கூடாது என்பதுபோல மாநில அரசு செயல்படக் கூடாது. இவ்வாறு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.