வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018-ம் ஆண்டு பிப்.21-ம் தேதி தனது அரசியல் பயணத்தை கமல்ஹாசன் தொடங்கினார். இதைத் தொடர்ந்து அன்றைய தினம் மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தனதுகட்சிப் பெயரை மக்கள் நீதி மய்யம் என அறிவித்தார். தொடர்ந்து, நடைபெற்ற மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல்களில் டார்ச் லைட் சின்னத்தில் அக்கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இந்நிலையில் வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடவுள்ள கட்சிகள் தங்களுக்கான சின்னத்தை டிச.17-ம் தேதி முதல் கேட்டுப் பெறலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அன்றைய தினமே டார்ச் லைட் சின்னம் கோரி மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் விண்ணப்பிக்கப்பட்டது. இதையடுத்து, நேற்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.