தமிழக சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை அந்த இருக்கையில் அமர்ந்திருந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வதுக்கு இரண்டாவது வரிசையில் இருக்கை ஒதுக்கீடு செய்து பேரவைத் தலைவர் அப்பாவு உத்தரவிட்டுள்ளார்.
நேற்றைய (பிப்.13) சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கேள்வி நேரம் முடிந்ததும், நேரமில்லா நேரத்தில், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, “எதிர்க்கட்சித் தலைவர் இருக்கை அருகில்தான் துணைத் தலைவர் அமர்வது பேரவையில் மரபாக உள்ளது. துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமார் எம்எல்ஏக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு துணைத் தலைவருக்கான இருக்கை ஒதுக்கப்படவேண்டும். இதுகுறித்து பலமுறை தங்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது” என்றார். இதனையடுத்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “எதிர்க்கட்சித் தலைவர் எடுத்து வைத்துள்ள கோரிக்கையை மறு பரிசீலனை செய்து அதற்கு ஆவண செய்யும்படி தங்களிடம் நான் உரிமையுடன் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.
இந்த நிலையில், இன்று (பிப்.14) அதிமுக உறுப்பினர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று எதிர்கட்சி துணைத் தலைவர் இருக்கையை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்கி பேரவைத் தலைவர் அப்பாவு உத்தரவிட்டுள்ளார். மேலும் இதுவரை அந்த இடத்தில் அமர்ந்திருந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இரண்டாம் வரிசையில் முன்னாள் சபாநாயகர் தனபால் இருக்கைக்கு அருகே இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.