திமுகவினர் வரும் 19ஆம் தேதியில் இருந்து விருப்ப மனு பெற்றுக்கொள்ளலாம்!

லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்பும் திமுகவினர் வரும் 19ஆம் தேதியில் இருந்து திமுக தலைமையிடத்திற்கு விருப்ப மனு பெற்றுக்கொள்ளலாம் என திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்னதாக திமுக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தேர்தல் அறிக்கை தயாரிக்க மாநிலம் முழுவதும் குழுவினர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். கூட்டணிக் கட்சியினருடன் பேச்சுவார்த்தை ஒருபக்கம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் எந்த தொகுதியில் யார் போட்டியிடுவது என்பது பற்றி அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

இந்த நிலையில் திமுக அடுத்த கட்ட பணியை தொடங்கியுள்ளது. திமுகவினரிடம் இருந்து விருப்ப மனுக்களை பெற உள்ளது. பிப்ரவரி 19 முதல் விருப்பமனுக்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது. அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனுக்களை பெற்று போட்டியிடும் தொகுதி, முழு விபரங்களை நிரப்பி மார்ச் 1 முதல் மார்ச் 7ஆம் தேதிக்குள் திரும்ப அளிக்க வேண்டும். பொது தொகுதியில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் கட்டணமாக ரூ.50000 செலுத்த வேண்டும். தனி தொகுதியில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் ரூ.20000 கட்டணம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.