மிக்ஜாம் புயல், தென்மாவட்ட கனமழை பாதிப்புக்கு தமிழக அரசு எவ்வளவு செலவு செய்துள்ளது என்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நேற்று நடந்த விவாதம் வருமாறு:
எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி: மாநில உரிமைக்கு அச்சுறுத்தலாக இருப்பது பற்றி ஆளுநர் உரையில் குறிப்பிடப்படவில்லை. குறிப்பாக, மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான நிதி பகிர்வு முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் எட்டுவோம் என்று சொல்கிறீர்கள். ஆனால், அதற்கு என்ன உத்திகளை வைத்துள்ளீர்கள். இதற்கான திட்டங்கள் அரசிடம் இருப்பதாகத் தெரியவில்லை. கடந்த மூன்று ஆண்டுகளில் விவசாய மேம்பாட்டுக்கு எந்தவிதமான ஆக்கப்பூர்வமான திட்டங்களும் நிறைவேற்றப்பட்டதாகத் தெரியவில்லை. மிக்ஜாம் புயல் மழை வெள்ளம், தென்மாவட்டங்களில் அதிகனமழை பாதிப்பு சேதத்துக்கு எவ்வளவு செலவு செய்தீர்கள் என்று அறிவிக்க வேண்டும்.
நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன்: 2021-22-ம் ஆண்டில் நீண்டகால நிரந்தர வெள்ள தடுப்புக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ரூ.100 கோடியில் பணிகள் நடந்தன. 2022-23-ம் ஆண்டில் இந்த பகுதியில் ரூ.436 கோடியில் பணிகள் நடைபெற்றன. 2023-24-ம் ஆண்டில் ரூ.231 கோடிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு பணிகள் முன்னேறியுள்ளன. கூடுதலாக மாநில பேரிடர் நிதியில் கடலூர், செங்கல்பட்டு, வேலூர் மாவட்டங்களுக்கு ரூ.118 கோடிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன.
பழனிசாமி: மிக்ஜாம் புயல் சேதத்துக்கு எவ்வளவு செலவு செய்யப்பட்டது என்ற விவரத்தைதான் நான் கேட்டேன். மாநில பேரிடர் நிதியில் இருந்து செலவு செய்யலாம். அப்போதுதான் மத்திய அரசிடம் இருந்து பெற முடியும். அதற்காக தான் எவ்வளவு செலவு செய்யப்பட்டுள்ளது என்று கேட்டேன். கர்நாடகாவிடம் இருந்து ஒவ்வொரு மாதமும் நமக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை முறையாகப் பெறாத காரணத்தால், சுமார் 3.5 லட்சம் ஏக்கர் பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகிவிட்டன. காலம் தாழ்த்தி தண்ணீரை திறந்ததால், விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளை முழுமையாக கணக்கிட்டு, ஒரு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். தேர்தல் பிரச்சாரத்தின்போது, ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.2,500 ஆதார விலையாக வழங்கப்படும், கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் ஆதார விலையாக வழங்கப்படும் என்று தெரிவித்தீர்கள். இதுவரை வழங்கவில்லை.
உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி: உங்கள் ஆட்சியில் சன்ன ரகத்துக்கு குவிண்டாலுக்கு ரூ.1,960 தான் வழங்கப்பட்டது. தற்போது ரூ.2,310 தருகிறோம். பொது ரகத்துக்கு ரூ.1,945 இருந்தது. இன்றைக்கு ரூ.2,265 கொடுக்கிறோம். நீங்கள் தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை. ஆனால், சொன்ன வாக்குறுதிகள் மட்டுமின்றி, சொல்லாத வாக்குறுதிகளையும் முதல்வர் நிறைவேற்றியுள்ளார். எனவே, நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2,500 இந்த அரசு வழங்கும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.