மத்திய அரசிடம் இருந்து நிதி பெற எதிர்க்கட்சி தலைவர் குரல் கொடுக்க வேண்டும்: மு.க. ஸ்டாலின்!

எதிர்க்கட்சி தலைவர் எங்களோடு இணைந்து மத்திய அரசிடம் இருந்து நிதி பெற குரல் கொடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரின் 4ஆம் நாளான இன்றைய தினம் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதிலளித்து பேசினர். மெட்ரோ ரயில் திட்டம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மெட்ரோ ரயில் வேண்டாம் என்று கூறி மோனோ ரயில் கேட்டவர்கள் தற்போது மெட்ரோ பற்றி பேசுவது மகிழ்ச்சி. மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணிகளுக்கு அதிமுக ஆட்சியில் முனைப்பு காட்டவில்லை. மெட்ரோ ரயில் திட்ட 2-ம் கட்ட பணிகளுக்கு ஒன்றிய அரசு நிதி வழங்காததால் மாநில அரசின் நிதியில் இருந்து பணி மேற்கொள்ளப்படுகிறது. பாஜக கூட்டணியில் இருந்தவரை வாய் திறக்காத எடப்பாடி பழனிசாமி தற்போதாவது பேசுவது ஆறுதல் தருகிறது. எதிர்க்கட்சி தலைவர் எங்களோடு இணைந்து மத்திய அரசிடம் இருந்து நிதி பெற குரல் கொடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.

கிராமப்புற விளிம்புநிலை மக்களின் கோரிக்கையை ஏற்று 2001க்கு முன்பு கட்டப்பட்ட 2.50 லட்சம் வீடுகளை பழுதுபார்க்க நடவடிக்கை எடுக்கப்படும். ரூ.2,000 கோடி செலவில் கிராமப்புறங்களில் வீடுகள் பழுது பார்க்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

சட்டசபையில் எப்போதுமே எதிரும் புதிருமாக இருக்கும் அதிமுகவும் திமுகவும் இணைந்து மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளது பாஜகவினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு எதிர்கட்சித் துணைத்தலைவர் இருக்கை தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி வைத்த கோரிக்கைக்கு ஆதரவாக பேசி சபாநாயகரின் ஒப்புதலை பெற்றுக்கொடுத்தார். இன்றைய தினம் மத்திய அரசிடம் நிதி கேட்டு இணைந்து குரல் கொடுப்போம் என்று அழைப்பு விடுத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.