சிவகாசி அருகே வெம்பக்கோட்டையில் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 10க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெம்பக்கோட்டையை அடுத்த ராமுதேவன்பட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 4க்கும் மேற்பட்ட அறைகள் இடிந்து தரைமட்டமானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 பெண்கள் 4 ஆண்கள் உள்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். ரமேஷ், கருப்பசாமி, அம்பிகா ஆகியோரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்டு சிசிக்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் சேகரிக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சாத்தூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் ஆயிரக்கணக்கான பட்டாசு ஆலைகள் உள்ளன. இங்கு அடிக்கடி ஏற்படும் விபத்துக்களால் ஏராளமானோர் உயிரிழக்க நேரிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பட்டாசு ஆலையில் மணிமருந்து கலக்கும் போது உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் பலரும் 90 சதவிகித காயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உயிரிழப்பு அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. பட்டாசுகள் மேலும் வெடித்து சிதறிக்கொண்டிருப்பதால் ஆலையில் இருந்த தொழிலாளர்கள் அனைவரையும் தீயணைப்பு படை வீரர்கள் வெளியேற்றியுள்ளனர்.
சிவகாசி, சாத்தூர், வெம்பக்கோட்டை பகுதியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பட்டாசு ஆலையில் உள்ள இடிபாடுகளில் யாரேனும் சிக்கியுள்ளனரா என்று தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர். விபத்து நடந்த இடத்திற்கு காவல்துறை அதிகாரிகளும், வருவாய் துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.