“தமிழகத்தில் மட்டுமல்ல, தென் மாநிலங்களிலும் பாஜக பருப்பு வேகாது.. தமிழகத்தில் பாஜக ஆட்சி மலராது. அண்ணாமலை எண்ணமும் பலிக்காது” என்று நடிகையும், அதிமுகவின் பேச்சாளருமான விந்தியா காட்டமாக கூறியிருக்கிறார்.
பொள்ளாச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்றது. இதில் நடிகையும், அதிமுக பேச்சாளருமான விந்தியா கலந்து கொண்டு பேசியதாவது:-
தொண்டமுத்தூர் எம்எல்ஏவான அண்ணன் எஸ்.பி.வேலுமணி ஒயிலாட்டம் நல்லா ஆடுவார். மக்களுக்கு பிரச்சினையின்னா ஓடுவார். தொண்டாமுத்தூர் தொகுதி அவரது கோட்டை. அதில் எவனானும் போட முடியாது ஓட்டை.. மக்களை டிசைன் டிசைனாக திமுகக்காரர்கள் ஏமாற்றுவார்கள். கேமரா முன் நின்று பேசுவாங்க.. ஆனால், தேர்தல் என்றவுடன் தனித்து நிற்க பயப்படுவாங்க.. ஏனென்றால் திமுகவுக்கு முதுகெலும்பு கிடையாது. இதுவரை திமுக தனித்து போட்டியிட்டது இல்லை. எங்கள் தலைவர்களையும், தமிழக மக்களை மதிக்கவில்லை என்பதால் பாஜக கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்டது. மக்களை காக்க ஆட்சி நடத்தினால் தைரியமாக தேர்தலை சந்திக்கலாம். ஆனால் குடும்பத்திற்காக, மகனுக்காக, மருமகனுக்காக ஸ்டாலின் ஆட்சி நடத்துகிறார்.
கடந்த 2014-ல் ஜெயலலிதா தனித்து நின்று 37 எம்.பி தொகுதிகளில் வெற்றி பெற்றார். அதே போல 2014-ல் தனித்து நின்று 136 எம்எல்ஏ சீட்டுகளில் வெற்றி பெற்றார். ஒரு கட்சியின் பலம் கூட்டணியோ, அடுத்த கட்சியில் இருந்து வரும் தலைவர்களோ அல்ல. மக்களிடம் இருக்கும் செல்வாக்கு, நம்பிக்கை தான். நோட்டாவுக்கு சமமாக இருக்கும் பாஜக, இப்போ ஒரு விளம்பரம் செய்திருக்கிறது.. 17 முன்னாள் எம்எல்ஏக்கள் பாஜகவில் சேர்ந்தார்கள் என்று அந்த விளம்பரத்தில் சொல்லப்பட்டிருந்தது. தம்பி அண்ணாமலை, அந்த 17 பேரையும் பாஜகவில் சேர்த்தற்குப் பதில், முதியோர் இல்லத்தில் சேர்த்திருந்தால் புண்ணியமாவது கிடைத்திருக்கும். இதனால் பாஜகவிற்கு பயந்து பென்சில் வாங்கக்கூட பெரியவர்களை வெளியே அனுப்ப பொதுமக்கள் பயப்படுகிறார்கள். ஏனென்றால், அவங்களையும் பிடித்து பாஜகவில் சேர்த்து விடுவாங்கனு பயப்படுறாங்க. அந்த அளவிற்கு பாஜ நிலை தமிழகத்தில் உள்ளது. தமிழகத்தில் மட்டுமல்ல, தென் மாநிலங்களிலும் பாஜக பருப்பு வேகாது.. தமிழகத்தில் பாஜக ஆட்சி மலராது. அண்ணாமலை எண்ணமும் பலிக்காது. இவ்வாறு விந்தியா பேசியுள்ளார்.