அமைச்சர் அன்பில் மகேஷ், லோக்சபா தேர்தலில் பாஜக வென்றால் ரூ.1000 உரிமையைத் தொகையை அவர்கள் நிறுத்திவிட வாய்ப்பு இருப்பதாகக் கூறியுள்ளார்.
கோவை கொடிசியா மைதானத்தில் “உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்” என்ற தலைப்பில் திமுக பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராகப் பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் அன்பில் மகேஷ் பேசியதாவது:-
மாநிலத்தின் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள நாம் ஒவ்வொரு முறை மத்திய அரசிடம் நிதியைக் கேட்டாலும் அவர்கள் நிதி தர மாட்டேன் என்கிறார்கள். எங்களுக்கு வாக்களிக்காத தமிழகத்திற்கு நிதி கிடையாது என என்கிறார்கள். பாசிசம் அடிக்கும் அடி பயங்கரமாக இருக்கும் என்று அண்ணா கூறியுள்ளார். ஆனால், இன்று இருக்கும் பாசிசம் ஏற்கனவே சரிய ஆரம்பித்துவிட்டது. இதற்கான நமது முதல்வரும் தான் காரணம். நாம் மாநில உரிமைகள் குறித்துத் தொடர்ந்து பேசி வருவதே இதற்குக் காரணம். இந்த திராவிட மாடல் அரசு அமைந்து 33 மாதங்களில் 1339 கோயில்களுக்குக் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று முறையைக் கொண்டு வந்துள்ளோம். மேலும், தமிழில் அர்ச்சனை முறையைக் கொண்டு வந்துள்ளோம். “சுக்லா பரதம்” என்ற சமஸ்கிருத துதிக்கு பதிலாக “பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன்” என்று தமிழில் கூறினால்தான் எனது தமிழ் கடவுளுக்குப் புரியும். மேலும், நாம் ஏதோ ஆன்மீகத்திற்கு எதிரானவர்கள் என்ற தோற்றத்தை உருவாக்க இந்த பாசிசம் முயல்கிறார்கள். அதை நாம் முறியடித்தே தீர வேண்டும்” என்றார்.
தொடர்ந்து செந்தில் பாலாஜி குறித்துப் பேசிய அவர், “சிறையில் உள்ள செந்தில் பாலாஜிக்குத் துணையாக நாங்கள் இருக்கிறோம். அவர் செந்தில் பாலாஜி என்பதால் இல்லை.. திமுக தொண்டன் என்பதால் திமுக அவர் பின்னால் இருக்கிறது.. அந்த நம்பிக்கையுடன் செந்தில் பாலாஜி இருக்கலாம்” என்று கூறினார்.
மேலும் மகளிர் உரிமை தொகை குறித்துப் பேசிய அன்பில் மகேஷ், “திமுக தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடியே மகளிருக்கு ரூ.1000 உரிமையைத் தொகையைத் தந்துவிட்டோம்.. மாதாமாதம் உங்களுக்கு உரிமை தொகை வருகிறது. ஆனால், 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பாஜக 15 லட்ச ரூபாயைத் தருவேன் என்றார்கள். இதுவரை யாருக்காவது அந்த 15 லட்சம் கிடைத்துள்ளதா.. வாக்கு கேட்டு வரும் போது மக்கள் பாஜகவிடம் இதைக் கேட்க வேண்டும். 2024 தேர்தல் என்பது இனி மாநிலக் கட்சிகளுக்குத் தேர்தல் இருக்குமா என்ற கேள்வியை எழுப்பக் கூடியது.. வாக்குரிமை இருக்குமா, அரசியல் சாசன சட்டம் இருக்குமா என்று கேள்வியை எழுப்பக் கூடிய தேர்தல்.. சிஏஏ என்பது இஸ்லாமியர்களுக்கு எதிரானது மட்டுமில்லை. நாளைய தினமே இது தமிழர்களுக்கும் கூட வேட்டு வைப்பதாகத் திரும்பலாம். இன்று பெண்கள் ரூ.1000 வாங்கிக்கொண்டு இருக்கிறீர்கள் அல்லவா.. இதைக் கூட அவர்கள் நிறுத்திவிடுவார்கள். பாஜகவின் கோட்டை எனப்படும் உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களைச் சேர்த்தாலே மொத்தம் 160 தொகுதிகள் தான். அவர்களால் இந்த முறை 200 தொகுதிகளைக் கூடப் பெறாது என நினைக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.