காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் தொகுதியில் மநீம போட்டியா: செல்வப்பெருந்தகை பதில்!

லோக்சபா தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இடம்பெறாது என்றும், காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் 2 ல் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிடும் என்று தகவல் பரவி வரும் நிலையில், இதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பதில் அளித்துள்ளார்.

லோக்சபா தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. இதனால் தேர்தலை சந்திக்க கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. கூட்டணி அமைப்பது, தொகுதி பங்கீடு என படு பிசியாக கட்சிகள் வேலை செய்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக கடந்த முறை எப்படி போட்டியிட்டதோ அதே கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. இதேபோல் கடந்த முறை அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைத்து போட்டியிட்ட நிலையில் இந்த முறை பாஜக தனியாகவும், அதிமுக தனியாகவும் லோக்சபா தேர்தலை சந்திக்கின்றன. திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரசுக்கு 6 சீட்கள் ஒதுக்கப்படுவதாக முடிவு எடுக்கப்பட்டது. எனினும் எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்ற உறுதியான முடிவு எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், லோக்சபா தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இடம்பெறாது என்றும், காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் 2 ல் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிடும் என்றும், மக்கள் நீதி மய்யம் முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றனர்.

இந்த பரபரப்பான அரசியல் சூழலில், தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த கே.எஸ். அழகிரி மாற்றப்பட்டு தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை நியமனம் செய்யப்பட்டார். தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்ட செல்வப்பெருந்தகை இன்று சென்னை கிண்டியில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மகாத்மா காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தி இருக்கிறோம். அடுத்ததாக காமராஜருக்கு மரியாதை செலுத்த இருக்கிறோம். தொடர்ந்து ராஜீவ் காந்திக்கும், பெரியார், அம்பேத்கர், இந்திராக காந்திக்கும் மரியாதை செலுத்த இருக்கிறோம். என்னை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக நியமித்த சோனியா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். அவர்கள் நம்பிக்கைக்கு ஏற்ப செயல்படுவோம். காந்தி வழியில் காந்தி சமாதியில் இருந்து பணியை தொடங்கியிருக்கிறேன். எங்கள் கட்சியில், இந்தியாவிலேயே அனுபவம் வாய்ந்த தலைவர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். இந்த கட்சியை தூக்கி நிறுத்தியவர்கள், கட்சிக்காக உழைத்தவர்கள். இன்னும் 50 ஆண்டுகளுக்கு, ஆட்சியில் இல்லை என்றாலும் கட்சியை உயிரோட்டத்தோடு, உயிர்ப்போடு காங்கிரஸ் கட்சியை வழிநத்துவதற்கு தலைவர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாரையும் கலந்து ஆலோசித்து, அரவணைத்து, தொண்டர்கள் எல்லாரும் என்ன நினைக்கிறார்களோ, அவர்கள் கனவுகளை எல்லோரும் சேர்ந்து நிறைவேற்றுவோம். காங்கிரஸ் மூத்த தலைவர்கள் எல்லோரும் வருவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் தொகுதியில் இருந்து மக்கள் நீதி மய்யத்திற்கு இடம் ஒதுக்கப்படும் என்று ஒரு தகவல் பரவி வருகிறதே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த செல்வப்பெருந்தகை, “நீங்களே யூகம் என்று சொல்லிவிட்டீர்கள். அதை ஏன் விவாதம் செய்யம் வேண்டும். யூகமாகவே இருக்கட்டும். எங்கள் கட்சியில் அனுபவம் உள்ள தலைவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் ஒருங்கிணைத்து அவர்களது ஆலோசனையின் பேரில் இன்னும் அதிகமாக கட்சியை வலிமையாக்க திட்டமிடுவோம்” இவ்வாறு அவர் கூறினார்.