பிகாரில் மெகா கூட்டணி ஆட்சியின்போது துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் மற்றும் லாலு கட்சி அமைச்சர்கள் செய்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.
பிகார் முதல்வர் நிதிஷ்குமார் நேற்று கூறியதாவது:-
ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியுடன் இணைந்து பிகாரில் ஆட்சி நடத்திய போது, துணை முதல்வர் தேஜஸ்வி, ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் லலித் யாதவ் மற்றும் ரமானந்த் யாதவ் ஆகியோர் பல முறைகேடுகளில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. அது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. துணை முதல்வர் தேஜஸ்வியின் பொறுப்பில் இருந்த சுகாதாரம், நெடுஞ்சாலை, நகர்ப்புற மேம்பாடு, வீட்டு வசதி மற்றும் ஊரக பணிகள் துறைகளில் எடுக்கப்பட்ட முடிவுகளை மறுபரிசீலனை செய்ய உத்தரவிட்டுள்ளேன்.
அதோடு லலித் யாதவ், ரமானந்த் யாதவ் ஆகியோர் பொறுப்பில் இருந்த பொது சுகாதார பொறியியல் துறை, சுரங்கத்துறை, புவியியல் துறைகளில் எடுக்கப்பட்ட முடிவுகளை மறு பரிசீலனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
கூட்டணி கட்சியினர் மற்றும் எதிர்க்கட்சியினருடன் நான் எப்போதும் நட்புறவை பராமரிக்கிறேன். ஆகையால், அவர்களை சந்திக்கும் போது நான் கை குலுக்குவேன். அதுபோல்தான் சட்டப்பேரவையில் லாலுவை சந்தித்தபோது கைகொடுத்தேன். மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி கடந்த 2019 மக்களவை தேர்தலில் பெற்ற தொகுதிகளை விட கூடுதல் இடங்களில் வெற்றி பெறும். இண்டியா கூட்டணி தலைவர்கள் எதுவும் செய்வதில்லை. அதனால்தான் அந்த கூட்டணியில் விரிசல் விழுகிறது. இண்டியா கூட்டணி பெயரை நான் வைக்கவில்லை. அவர்களாகவே வைத்துக் கொண்டார்கள். இண்டியா கூட்டணிக்கும் எனக்கும் தற்போது எந்த சம்பந்தமும் இல்லை. நான் தே.ஜ கூட்டணிக்கு திரும்பிவிட்டேன்.
இவ்வாறு நிதிஷ் குமார் கூறினார்.