மேகேதாட்டுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டும் முயற்சியை தடுக்க வேண்டும்: ஜி.கே.வாசன்!

தமிழக அரசு, கர்நாடக அரசின் மேகேதாட்டு அணை சம்பந்தமான அறிவிப்பை கண்டும் காணாமல், மெத்தனப் போக்கை கடைப்பிடித்து அரசியல் செய்வது நியாயமில்லை என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கர்நாடக முதல்வர் மேகேதாட்டுவில் அணை கட்டப்படும் என்று தெரிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது. குறிப்பாக, மேகேதாட்டு அணை தொடர்பாக நிதி ஒதுக்கீடு செய்து, முன்னேற்பாடுகள், குழுக்கள், நீர் செல்லும் நிலப் பரப்பு உள்ளிட்டவை தொடர்பாக ஆய்வு செய்யும் பணி நிறைவடைந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

மேகேதாட்டுவில் அணை கட்டினால் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய காவிரி நீர் கிடைக்காமல், தமிழக விவசாயிகளும், பொதுமக்களும் பாதிக்கப்படுவார்கள். தமிழக அரசு, கர்நாடக அரசின் மேகேதாட்டு அணை சம்பந்தமான அறிவிப்பை கண்டும் காணாமல், மெத்தனப் போக்கை கடைப்பிடித்து அரசியல் செய்வது நியாயமில்லை. தமிழக அரசு இனியும் தாமதிக்காமல், கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராகச் செயல்படும் கர்நாடக அரசின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.