பல நாடுகளுடனான நமது வலிமையான உறவை உலகம் பார்த்து கொண்டிருக்கிறது: பிரதமர் மோடி

பல நாடுகளுடனான நமது வலிமையான உறவை உலகம் பார்த்து கொண்டிருக்கிறது. வர்த்தகம், சுற்றுலா மற்றும் தொழில் நுட்பத்தில் நம்முடைய உறவுகள் சிறந்தவையாக உள்ளன என பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

டெல்லி பாரத் மண்டபத்தில் நடந்த பா.ஜ.க. தேசிய மாநாட்டின் நிறைவு நாளில் பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் பேசும்போது, 2014-ம் ஆண்டு நான் பதவி பிரமாணம் எடுத்து கொண்டபோது, ஒரு மாநிலத்திற்கு வெளியே மோடிக்கு என்ன அனுபவம் இருக்க போகிறது என பலர் விமர்சித்தனர். வெளியுறவு கொள்கை பற்றி பல விசயங்கள் கூறப்பட்டன என அவர் கூறினார். கடந்த ஆண்டில், பிரதமர் மோடியின் தூதரக அளவிலான வெற்றிகள் பரவலாக பார்க்கப்படுகிறது.

சர்வதேச ஒத்துழைப்பை வளர்ப்பது, நட்புறவுகளை வலுப்படுத்தியது மற்றும் உலகளாவிய அமைதி மற்றும் வளர்ச்சியில் இந்தியாவின் உள்ளார்ந்த ஈடுபாட்டை வெளிப்படுத்தியது என பல்வேறு விசயங்களை அவர் மேற்கொண்டார். இதுமட்டுமல்லாமல், நடப்பு 2024-ம் ஆண்டு தொடக்கத்தில், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தார் நாடுகளுக்கு அவர் வரலாற்று பயணம் மேற்கொண்டார்.

இதுபற்றி குறிப்பிட்ட அவர், பல நாடுகளுடனான நமது உறவு எப்படி வலிமையாக உள்ளது என்று இந்த உலகம் ஆனது பார்த்து கொண்டிருக்கிறது. வர்த்தகம், சுற்றுலா மற்றும் தொழில் நுட்பத்தில் நம்முடைய உறவுகள் சிறந்தவையாக உள்ளன என பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

5 அரபு நாடுகள் எனக்கு, அவர்களுடைய நாட்டின் உயரிய கவுரவங்களை வழங்கினர். இது பிரதமர் மோடிக்கான கவுரவம் என்றல்லாமல், 140 கோடி நாட்டு மக்களின் கவுரவம் ஆகும் என்றும் அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது:-

மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியினர்கூட இதைத்தான் கூறுகின்றனர். இது சாத்தியமாக வேண்டுமானால் பாஜக 370 இடங்களில் வெற்றி பெறுவது அவசியம்.

நாட்டு நலனுக்காக பாஜக நிர்வாகிகள் ஆண்டு முழுவதும் தொடர்ந்து பல்வேறு பணிகளில் ஈடுபடுகின்றனர். எனினும், அடுத்த 100 நாட்களுக்கு புதிய உத்வேகம், நம்பிக்கையுடன் நிர்வாகிகள் பணியாற்ற வேண்டும். ஒவ்வொரு புதிய வாக்காளர், மத்திய அரசு திட்டங்களின் பயனாளிகள், ஒவ்வொரு சமுதாயத்தினரையும் நேரில் சந்தித்து, மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்க வேண்டும்.

நான் 3-வது முறையாக பிரதமர் ஆக வேண்டும் என்று விரும்புவது, அதிகாரத்தை அனுபவிக்க அல்ல. நாட்டின் முன்னேற்றத்துக்கு பாடுபடுவதற்காகவே மீண்டும் பிரதமராக விரும்புகிறேன். ஏழைக் குழந்தைகளின் எதிர்காலத்துக்காக நான் வாழ்கிறேன். கோடிக்கணக்கான பெண்கள், ஏழைகள் மற்றும் இளைஞர்களின் கனவுதான் மோடியின் தீர்மானம். இவ்வாறு பிரதமர் பேசினார்.

பா.ஜனதா தேசிய கவுன்சில் கூட்டத்தில் அயோத்தி ராமர் கோவில் குறித்து ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

பண்டைய புனித நகரமான அயோத்தியில் ராமருக்கு அவர் பிறந்த இடத்தில் கோவில் கட்டியது, வரலாற்று சிறப்புமிக்க சாதனை. அடுத்த 1,000 ஆண்டுகளுக்கான ‘ராம ராஜ்யம்’ நிறுவப்பட்டதை இது உணர்த்துகிறது. ராமர் கோவிலுக்கு வெற்றிகரமாக கும்பாபிஷேகம் நடத்திய பிரதமரின் தலைமையை பா.ஜனதா இதயபூர்வமாக வாழ்த்துகிறது.

இந்தியாவின் தொலைநோக்கு பார்வை, தத்துவம், பாதை ஆகியவற்றின் அடையாளமாக ராமர் கோவில் திகழ்கிறது. தேசிய உணர்வுக்கான கோவிலாக ஆகிவிட்டது. கும்பாபிஷேகத்தை தொலைக்காட்சியில் கண்ட ஒவ்வொரு இந்தியனும் மகிழ்ச்சி அடைந்துள்ளான். ‘ராம ராஜ்யம்’ என்ற கருத்து, மகாத்மா காந்தியின் மனதிலும் இருந்தது. ‘ராம ராஜ்யம்’ என்பது உண்மையான ஜனநாயகத்துக்கான அடையாளம். அதை நல்லாட்சிக்கான உதாரணமாக பிரதமர் மோடி பின்பற்றி வருகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.