எங்களிடம் திறமை உள்ளது, ரஷ்யாவிடமிருந்து நாங்கள் கச்சா எண்ணெய் வாங்குகிறோம் என்று வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்தார்.
ஜெர்மனி தலைநகர் முனிச்சில் சர்வதேச பாதுகாப்பு மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள், மந்திரிகள் உள்பட பலர் கலந்துகொண்டுள்ளனர். இந்தியா சார்பில் இந்த மாநாட்டில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்றுள்ளார். அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, கனடா உள்பட பல்வேறு நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகளும் மாநாட்டில் கலந்துகொண்டுள்ளனர்.
இந்நிலையில், இம்மாநாட்டின் ஒரு பகுதியாக இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், அமெரிக்கா வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன், ஜெர்மனி வெளியுறவுத்துறை மந்திரி அனலினா பியர்பாக் ஆகியோர் பங்கேற்ற விவாத நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
அந்த நிகழ்ச்சியில் இந்தியா நிறைய வாய்ப்புகள் கொண்ட மனநிலையில் இருப்பதும் அணிசேரா நாடுகள் அல்லது அனைத்து நாடுகள் என்பதிலும் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதும் உங்கள் எதிர்தரப்பில் உள்ள அமெரிக்கா ஏற்றுக்கொள்கிறதா? என்று இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரிடம் நிகழ்ச்சி தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த ஜெய்சங்கர், எங்களுக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளனவா? என்பது உங்கள் கேள்வி. அதற்கு பதில் ஆம் எங்களுக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. அதில் ஏதாவது பிரச்சினை உள்ளதா? என்ன பிரச்சினை உள்ளது? நிறைய வாய்ப்புகளை உருவாக்க எங்களிடம் திறமை இருக்கும்போது அதற்காக நீங்கள் எங்களை பாராட்ட வேண்டுமே தவிர விமர்சிக்கக்கூடாது. இது மற்றவர்களுக்கு ஏதேனும் பிரச்சினையை உருவாக்குமா என்றால் நிச்சயம் உருவாக்காது’ என்றார்.