உத்தர பிரதேசத்தில் டிராக்டர் குளத்தில் கவிழ்ந்து 24 பேர் உயிரிழப்பு!

உத்தர பிரதேச மாநிலத்தில் டிராக்டர் டிராலி கவிழ்ந்து குளத்தில் விழுந்ததில் 8 குழந்தைகள் உட்பட 24 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 10-க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டு மாகி பூர்ணிமா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. பவுர்ணமியை முன்னிட்டு இந்துக்கள் நதிகளில் புனித நீராடி வழிபடுவது வழக்கம். அதன்படி, உத்தர பிரதேச மாநிலம் எடா மாவட்டத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்த 40 பேர் கதார் கஞ்ச் பகுதியில் கங்கையில் புனிதநீராட நேற்று டிராக்டர் டிராலியில் புறப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள், பெண்கள். டிராக்டர் டிராலி கஸ்கஞ்ச் மாவட்டம் வழியாக செல்லும்போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த குளத்தில் கவிழ்ந்தது. இதில் 8 குழந்தைகள்உட்பட 24 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும்,10-க்கும் மேற்பட்டோர் படுகாயம்அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து அலிகர் ஐஜி சலாப் மாத்தூர் கூறும்போது, ‘‘சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் டிராலி ஓடியுள்ளது. அப்போது, சாலையில் கார் மீது மோதுவதை தவிர்க்க ஓட்டுநர் முயற்சித்துள்ளார். அப்போது டிராக்டர் டிராலி கவிழ்ந்து குளத்தில் விழுந்துள்ளது. குளத்தில் சகதி நிறைந்திருந்ததால் பலர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடக்கிறது’’ என்றார்.

இதுகுறித்து தகவல் அறிந்த முதல்வர் யோகி ஆதித்யநாத், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சரியான சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதிப்படுத்த அதிகாரிகளுக்கு முதல்வர் ஆதித்யநாத் உத்தரவிட்டார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்று அவர் அறிவித்தார்.