அண்ணாமலைக்கு வாய்க்கொழுப்பு அதிகம்: செல்லூர் ராஜு

அண்ணாமலைக்கு வாய்க்கொழுப்பு அதிகம் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார்.

கடந்த 5 ஆண்டுகளாக பாஜக – அதிமுக கூட்டணி அமைத்து சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களை எதிர்கொண்ட நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தக் கூட்டணி உடைந்தது. அண்ணாமலையின் பேச்சுகளால் கூட்டணியை முறித்துக்கொண்டது அதிமுக. வரும் லோக்சபா தேர்தலில் எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய கூட்டணியை அமைத்துள்ளது அதிமுக. எஸ்.டி.பி.ஐ உடன் கூட்டணி அமைத்துள்ள அதிமுகவை கடுமையாக விமர்சித்தார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. திமுகவைப் போலவே, பங்காளிக் கட்சியும், தீவிரவாத இயக்கமான PFI இயக்கத்துடன் தொடர்புடைய எஸ்.டி.பி.ஐ உடன் கூட்டணி வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவரின் நோக்கம், பொதுமக்கள் பாதுகாப்பை அடகு வைத்தாவது அதிகாரத்தை அடைய வேண்டும் என்பது மட்டும்தான் என கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் அண்ணாமலை.

இந்நிலையில், மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் செய்தியாளர்கள் அண்ணாமலையின் விமர்சனம் தொடர்பாக கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த செல்லூர் ராஜு, “இதனால் தான் பாஜக சிறுபான்மையின மக்களால் வெறுக்கப்படும் கட்சியாக இருக்கிறது. அண்ணாமலை போன்றவர்கள் இருப்பதால் தான் பாஜகவை தமிழ்நாட்டில் இருந்து விரட்டவேண்டும் என மக்கள் முடிவெடுத்துள்ளனர். அண்ணன் தம்பியாக, மாமன் மச்சானாகப் பழகும் இந்து முஸ்லீம் சகோதரர்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் நோக்கில் தீவிரவாத இயக்கம் என்று சொல்வது மிக மோசமானது. அண்ணாமலைக்கு வாய்க் கொழுப்பு அதிகம். இதை பாஜக எப்படி பார்த்துக் கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை.” என்றார்.

தொடர்ந்து பேசிய செல்லூர் ராஜு, “போருக்கு தயாராக உள்ளது போல அதிமுக நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராக உள்ளது. மன்னர் படை வீரர்களை தயார் செய்வது போல அதிமுக தொண்டர்களை எடப்பாடி பழனிச்சாமி தயார் செய்துள்ளார். தேர்தல் தேதி எப்போது அறிவித்தாலும் களப்பணி செய்ய அதிமுக தயாராக உள்ளது. திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொம்மை போல காட்சி அளிக்கிறார்கள். அதுபோல அல்லாமல் வெற்றி பெறும் அதிமுக உறுப்பினர்கள் மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பார்கள். தேர்தலில் கூட இருக்கும் வரை தான் நண்பர்கள். வெளியே போய் விட்டால் அவர்கள் எங்களுக்கு எதிரியே. மோடியா? எடப்பாடியா? என்கிற நிலைப்பாடு எங்களிடம் இல்லை.

தேர்தல் நேரத்தில் திமுகவுக்கு பாதிப்புகள் வரும் என எண்ணியே சட்டமன்றத்தில் துணைத் தலைவர் இருக்கை மாற்றி கொடுக்கப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் தலைவர் போல பேசுவதில்லை. அவர் மேடைப் பேச்சாளர் போல பேசி வருகிறார். அதிமுகவில் எம்எல்ஏவாக பதவி வகித்து, பக்கத்து வீட்டுக்காரருக்கே தெரியாதவர்களை பாஜகவில் சேர்த்துக் கொண்டுள்ளனர். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் அனைவரும் உதிர்ந்த இலை. அவர்களைப் பற்றி நாங்கள் கவலைப்படுவதில்லை.

அதிமுக கூட்டணி குறித்து எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்வார். கூட்டணி குறித்து முடிவெடுக்கும் முழு அதிகாரமும் அவரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் எடுக்கும் முடிவுக்கு அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கட்டுப்படுவார்கள். திமுகவுடன் கூட்டணியில் இருக்கிற கட்சிகளே, அதிமுக கூட்டணிக்கு வருவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.