போதை பொருள் கடத்தலில் டெல்லியில் தமிழர்கள் 3 பேர் கைது!

50 கிலோ எடையுள்ள சூடோ பெட்ரைன் போதைப்பொருள் கடத்தலில் டெல்லியில் தமிழர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த ஆப்ரேஷன் எப்படி நடந்தது என்பது குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.

இப்போது சட்ட விரோதமாகப் போதைப் பொருளை இந்தியா வழியாகக் கடத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இதைக் கண்காணித்துச் சம்மந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கையை என்சிபி அதிகாரிகள் எடுத்து வருகிறார்கள். அப்படியொரு சம்பவம் தான் சமீபத்தில் டெல்லியிலும் நடந்தது. டெல்லியில் என்சிபி அதிகாரிகள் நடத்திய ஆப்ரேஷனில் 50 கிலோ எடையுள்ள சூடோ பெட்ரைன் போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், இந்த விவகாரத்தில் இதுவரை 3 பேரைக் கைது செய்துள்ளனர். அவர்கள் 3 பேரும் தமிழர்கள் என்பது தெரிய வந்துள்ளது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவல்கள் அடிப்படையில் அடுத்த கட்ட விசாரணையை என்சிபி அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். இதன் பின்னணியில் மிகப் பெரிய கேங் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே கைது செய்யப்பட்ட அந்த 3 பேரின் போட்டோவை கூட அதிகாரிகள் வெளியிடவில்லை. இதற்கிடையே அந்த கேங் எப்படிச் சிக்கினார்கள் என்பது குறித்து சில பரபர தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச போதைப்பொருள் கடத்தலை முறியடித்து என்சிபி கேங் டெல்லியில் உள்ள அந்த குடோனில் வைத்து 3 பேரை கைது செய்துள்ளது. உணவுப் பொருட்கள் என்ற பெயரில் இந்த போதைப் பொருட்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுவதும் தெரிய வந்துள்ளது. இதுவரை 3 பேரை கைது செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள 4ஆவது நபரைத் தேடி வருகிறார்கள். தலைமறைவாக உள்ள அந்த நபர் தமிழ் சினிமாவின் தயாரிப்பாளர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த போதைப் பொருள் நெட்வோர்க் குறித்து முதலில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போலீஸ் அதிகாரிகளிடம் இருந்தே என்சிபி அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்துள்ளது. அதன் பிறகு நடத்தப்பட்ட சீக்ரெட் ஆப்ரேஷனில் தான் சுமார் 50 கிலோ சூடோபெட்ரைன் கைப்பற்றப்பட்டது. இந்த சூடோபெட்ரைனை வைத்துத் தான் போதைப் பொருட்களைத் தயாரிப்பார்கள். கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி பாசாய் தாராபூரில் உள்ள குடோனில் நடத்தப்பட்ட ரெய்டில் போதைப் பொருளை அதிகாரிகள் பிடித்துள்ளனர். ஆப்ரேஷன்: சுமார் 4 மாதங்கள் பக்காவாக திட்டமிட்டு இந்த ரெய்டை என்சிபி வெற்றிகரமாக நடத்தியுள்ளதாக அந்த அமைப்பின் துணை இயக்குநர் ஜெனரல் ஞானேஷ்வர் சிங் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுக்குத் தேங்காய்ப் பொடி என்று சொல்லி சூடோபெட்ரின் அதிக அளவில் அனுப்பப்படுவதாக அந்த நாடுகளில் இருந்து எங்களுக்குத் தகவல் கிடைத்தது. அமெரிக்க அதிகாரிகளும் இது தொடர்பாகக் கூடுதல் தகவல்களை அளித்தனர். அதன்படியே இந்த ஆப்ரேஷனை நடத்தினோம்” என்றார்.

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் சூடோபெட்ரின் ஒரு கிலோவுக்கு சுமார் ₹1.5 கோடிக்கு விற்கப்படுகிறது. இதில் சம்மந்தப்பட்டவர்களைப் பிடிக்க டெல்லி போலீஸ் சிறப்புப் பிரிவு மற்றும் என்சிபி அதிகாரிகளுடன் இணைந்து ஜாயின் ஆப்ரேஷன் செய்துள்ளனர். சுமார் 4 மாதங்கள் கண்காணித்த பிறகே அதிரடி ஆப்ரேஷனை அவர்கள் மேற்கொண்டுள்ளனர். சம்மந்தப்பட்ட இடத்தை 24 மணி நேரமும் கண்காணித்த அதிகாரிகள், டெல்லி போலீசார் உதவியுடன் இந்த ஆப்ரேஷனை நடத்தியுள்ளனர். இதில் நான் பேரை கைது என்சிபி அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையிலேயே தமிழ் சினிமா தயாரிப்பாளருக்கு இதில் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது.