பரந்தூர் விமான நிலையம் நிலம் எடுப்பு அறிவிப்பாணை வெளியீடு!

சென்னையின் 2-வது பசுமை விமான நிலையம் பரந்தூர் பகுதியில் அமைக்கப்பட உள்ளது. இந்த விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரத்தை மையமாக வைத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் அரசு விமான நிலையம் அமைப்பதற்காக நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக முதல் கட்டமாக விளைநிலங்கள் இல்லாத பகுதியில் விமான நிலையம் கட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் போராட்டக் குழு அவசரமாக பிப். 25-ம் தேதி (இன்று) கூடுகிறது. இது குறித்து போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஆர்.எல்.இளங்கோ கூறும்போது, “ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் நிலம் எடுப்பதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்தப் பகுதி விளை நிலங்கள் அதிகம் இல்லாத பகுதி. யாரும் உரிமை கோராத இடங்கள் அதிகம் உள்ளன. இதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. மொத்தமாக நிலம் எடுத்தால் மக்கள் போராட்டம் வெடிக்கும் என்பதால் கொஞ்சம் கொஞ்சமாக நிலம் எடுக்கும் முயற்சியில் அரசு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அடுத்தகட்ட போராட்டம் தொடர்பாக நாங்கள் கூடி முடிவு செய்வோம். இந்த நிலம் எடுப்பதற்காக திறக்கப்பட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளோம். அது தொடர்பாக இந்தக் கூட்டத்தில் விவாதிக்க உள்ளோம்” என்றார்.