குஜராத் மாநிலத்தில் கடலுக்கு அடியில் மூழ்கி இருக்கும் துவாரகா பகுதியில் ஸ்கூபா டைவிங் செய்து பிரதமர் மோடி சிறப்புப் பூஜை செய்தார்.
பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்டப் பணிகளைத் தொடங்கி வைக்கக் குஜராத் மாநிலத்தில் பிரதமர் மோடி சென்றுள்ளார். இன்று பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். நாட்டில் உள்ள புராதன இடங்களில் ஒன்றான துவாரகையில் பிரதமர் மோடி நீருக்கு அடியில் சென்று பூஜை செய்துள்ளார். இதற்காக அவர் குஜராத் கடற்கரையில் அரபிக்கடலில் மூழ்கி பூஜை செய்தார். இந்த துவாரகா பகுதிக்கும் பகவான் கிருஷ்ணருக்கும் வலுவான ஒரு தொடர்பு இருப்பதாக நம்பப்படுகிறது. ஒரு காலத்தில் செழித்து வளர்ந்த நகரமாக இருந்த துவாரகா, இப்போது பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கியதாகக் கூறப்படுகிறது. இந்த பகுதியில் தொல்பொருள் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் நீருக்கு அடியில் பண்டைய துவாரகாவின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த இடத்திற்குத் தான் பிரதமர் மோடி நேரடி சென்று பூஜை செய்துள்ளார். அவர் பெய்ட் துவாரகா தீவுக்கு அருகில் உள்ள துவாரகா கடற்கரையில் ஸ்கூபா டைவிங் மூலம் கடலுக்குச் சென்று பூஜை செய்துள்ளார். வரலாறு ரீதியாகவும் ஆன்மீகத்திலும் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் பிரார்த்தனை செய்யவே பிரதமர் மோடி ஸ்கூபா கியர் அணிந்து கொண்டு நீருக்கு அடியில் சென்றுள்ளார். காவி நிற உடை அணிந்து நீருக்கு அடியில் சென்று அவர் பூஜை செய்த படங்கள் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இந்த புராதன நகருக்கு மரியாதை செலுத்திய பிரதமர் மோடி, கிருஷ்ணருக்கு அடையாளமாக மயில் இறகுகளைக் காணிக்கையாகச் செலுத்தினார்.
இது குறித்த படங்களைத் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பிரதமர் மோடி, “தண்ணீரில் மூழ்கியிருக்கும் துவாரகா நகரில் பிரார்த்தனை செய்வது மிகவும் தெய்வீகமான அனுபவம். ஆன்மீக மகத்துவம் மற்றும் பக்தி கொண்ட ஒரு பண்டைய சகாப்தத்துடன் நான் இணைந்துள்ளேன். பகவான் ஸ்ரீ கிருஷ்ணா. எங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக குஜராத்தின் தேவபூமி துவாரகா மாவட்டத்தில் உள்ள துவாரகா தீவை ஓகாவுடன் இணைக்கும் 2.32 கிமீ நீளமுள்ள நாட்டின் மிக நீளமான பாலமான ‘சுதர்ஷன் சேதுவை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது. பாலம் ஒரு தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது, இந்த கேபிள் பாலத்தில் ஸ்ரீமத் பகவத்கீதையின் வசனங்கள் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும், இருபுறமும் கிருஷ்ணரின் உருவங்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது. சுமார் 2.32 கிமீ நீளமுள்ள பாலத்தில் 900 மீட்டர் சென்ட்ரல் டபுள் ஸ்பான் கேபிள் ஸ்டேட் பகுதியாகவும் 2.45 கிமீ நீளச் சாலையாகும் உள்ளது. இந்த பாலத்தில் இரண்டு பக்கமும் 2.50 மீட்டர் அகல நடைபாதைகள் உள்ள நிலையில், இதில் சோலார் பேனல்களும் பொருத்தப்பட்டுள்ளது. சுமார் ₹ 979 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த கேபிள் பாலம் , புகழ்பெற்ற துவாரகாதீசர் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு ரொம்பவே முக்கியமானதாக இருக்கும்.