“வேல் யாத்திரை 4 சட்டமன்ற உறுப்பினர்களை கொடுத்தது. இந்த யாத்திரை 40 பாராளுமன்ற உறுப்பினர்களை கொடுக்கப் போகிறது.” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
என் மண், என் மக்கள் என்ற தலைப்பில் யாத்திரை மேற்கொண்டு வரும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை 233வது தொகுதியாக திருப்பூர் வடக்கு தொகுதியில் இன்று தனது யாத்திரையை தொடங்கியுள்ளார். 234 வது தொகுதியாக திருப்பூர் தெற்கு தொகுதியில் யாத்திரையை நிறைவு செய்து மதியம் நடைபெற உள்ள எண் மண், என் மக்கள் நிறைவு விழா மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளார். இந்த மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
இந்தநிலையில் திருப்பூரில் நடந்துவரும் யாத்திரையில் பேசிய அண்ணாமலை, “திருப்பூர் என்றால் பீனிக்ஸ் பறவை போல் உழைத்து முன்னேற கூடிய மக்கள் இருக்கும் இடம். தமிழக அரசை புரட்டிப் போடக் கூடிய வகையில் இந்த யாத்திரை இருக்கும். அடுத்த பிரதமர் யார் என்று தெரிந்து வாக்களிக்கும் தேர்தல் இது. ஆனால் அது 400 அல்லது அதற்கு மேலாக என்பது தான் கணக்கு. மோடி மக்களை சந்திக்கும் கூட்டம் இது. எனவே மக்கள் தங்கள் குடும்பத்துடன் அங்கு வர வேண்டும். வேல் யாத்திரை 4 சட்டமன்ற உறுப்பினர்களை கொடுத்தது. இந்த யாத்திரை 40 பாராளுமன்ற உறுப்பினர்களை கொடுக்கப் போகிறது” எனத் தெரிவித்தார்.