‘என் மண் என் மக்கள்’ யாத்திரையால் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம்: எல்.முருகன்!

என் மண் என் மக்கள் யாத்திரை, தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

சென்னையில் இருந்து மத்திய இணையமைச்சர் எல்.முருகன், விமானம் மூலம் நேற்று காலை கோவைக்கு வந்தார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை நிறைவுவிழா பல்லடத்தில் நாளை (இன்று) பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். என் மண்என் மக்கள் யாத்திரை திமுக அரசின் ஊழல்களை மக்களிடம் எடுத்துச் செல்லும் யாத்திரையாகவும், திமுகவின் இயலாமையை வெளிப்படுத்தும் யாத்திரையாகவும், பிரதமரின் 10 ஆண்டுகளாக சாதனைகளை எடுத்துச்சொல்லும் யாத்திரையாகவும் அமைந்துஉள்ளது.

இந்த யாத்திரை 234 தொகுதியிலும் நடந்து முடிந்துள்ளது. தமிழகத்தில் கிராமம்தோறும் கஞ்சா ஊடுருவி இருக்கிறது. இதற்கு உதாரணமாக திமுக நிர்வாகியே ரூ.3 ஆயிரம் கோடி அளவுக்கு போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து விளக்கத்தை திமுக தலைவர் ஸ்டாலின் சொல்ல வேண்டும் என தமிழக மக்கள் விரும்புகிறார்கள். தேசியஜனநாயக கூட்டணியில் உள்ளவர்கள் பிரதமர் பங்கேற்கும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.