நான் ஃபியூஸ் போன பல்ப்பா.. நான் சூப்பராக எரிகிற எல்இடி லைட்டு: விஜயதாரணி!

பாஜகவில் இணைந்த விஜயதாரணியை ஃபியூஸ் போன பல்பு என காங்கிரஸ் தலைவர்கள் விமர்சித்த நிலையில், நான் எல்இடி பல்பு என அவர் கூறியுள்ளார்.

விளவங்காடு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த விஜயதாரணி, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து அண்மையில் பாஜகவில் இணைந்து காங்கிரஸுக்கு ஷாக் கொடுத்தார். மேலும், தனது எம்எல்ஏ பதவியையும் அவர் ராஜினாமா செய்தார். இந்த சூழலில், விஜயதாரணியை காங்கிரஸ் தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அவரை நம்பிக்கை துரோகி என்றும், பியூஸ் போன பல்பு எனவும் கிண்டலடித்து வருகின்றனர். இந்நிலையில், இப்படி கூறுவது குறித்து விஜயதாரணியிடம் நிருபர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

என்னது.. நான் ஃபியூஸ் போன பல்ப்பா? நான் ஃபியூஸ் போன பல்ப்பாக இருந்தால், இத்தனை மீடியாக்கள் என்னிடம் பேச வருவீர்களா? நான் சூப்பராக எரிகிற எல்இடி லைட்டு என்று தெரிந்து தானே நீங்கள் என்னிடம் பேச வருகிறீர்கள். நல்லா புரிஞ்சுக்கோங்க. அவங்களால முடிஞ்சா அவங்க கட்சியை (காங்கிரஸ்) வளர்த்துக் காட்டட்டும். நானே சந்தோஷப்படுவேன். ஒரு எதிர்க்கட்சி அந்தஸ்து கூட இல்லாத அளவுக்கு கட்சியை அழித்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் என்னை பார்த்து கிண்டல் அடிக்கிறார்களா?

இப்படி என்னை போன்ற தலைவர்களை எல்லாம் துரத்திவிட்டு இவர்கள் எத்தனை காலம் கட்சியை நடத்த போகிறார்கள் என்று தெரியவில்லை. நான் துரோகம் செய்துவிட்டேன் என்று சொல்கிறார்களே.. 37 வருஷமாக கட்சிக்காக உழைத்த எனக்கு இவர்கள் செய்த துரோகக்தை யாரிடம் நான் சொல்வது? நான் பாஜகவில் இணையப் போகிறேன் என்ற செய்தி 2 வாரங்களாக ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கிறது. ஆனால் என்னை நேரில் சந்திக்க கூட வேண்டாம்.. தொலைபேசியில் கூட யாரும் தொடர்பு கொள்ளவில்லை. அவ்வளவு ஏன்.. சட்டமன்றக் குழுத் தலைவராக நான் தேர்வு செய்யப்பட்ட போதிலும், அந்த பொறுப்பை வேறு ஒருவருக்கு தூக்கி கொடுத்தார்கள். பெண் என்ற ஒரே காரணத்தால் எனக்கு அந்த பொறுப்பை கொடுக்கவில்லை. இது துரோகம் இல்லையா? இவ்வாறு விஜயதாரணி கூறினார்.