பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் இணைந்துள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து 2ஆவது கட்சியாக ஜான் பாண்டியன் கட்சி இணைந்துள்ளது.
லோக்சபா தேர்தல் சூடுபிடித்து வரும் நிலையில் அதிமுக, திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி குறித்து பேசி வருகிறது. அந்த வகையில் திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளுக்கு முறையே நாமக்கல், ராமநாதபுரம் ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதை தவிர்த்து வேறு எந்த தொகுதிகளும் தமிழகத்தில் இறுதி பெறவில்லை. திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் இன்னமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அது போல் அதிமுகவை எடுத்துக் கொண்டால் அக்கட்சியில் இன்னும் ஒரு கட்சி கூட கூட்டணிக்காக இணையவில்லை. தேமுதிக, பாமகவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தாலும் இழுபறியே நீடிக்கிறது. இரு கட்சிகளும் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை கேட்கிறார்களாம். ஆனால் அதிமுக அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. அது போல் பாமக 9 இடங்களை கேட்பதாகவும் அதிமுகவோ 7 லோக்சபா தொகுதிகளை தர முன் வருவதாகவும் கூறப்படுகிறது. அது போல் தேமுதிகவுக்கு கொடுக்கப்படும் 7 இடங்களில் விருப்பத் தொகுதிகளை பெறுவதிலும் அதிமுகவுடன் இழுபறி நிலவுவதாக சொல்லப்படுகிறது. சமத்துவ மக்கள் கட்சியும் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியில் முதல் கட்சியாக ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் இணைந்துள்ளது. அவரை தொடர்ந்து ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கட்சியும் இன்று இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து ஜான் பாண்டியன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
காங்கிரஸ் கட்சி மக்களுக்கு எதையும் செய்யவில்லை. பிரதமர் நரேந்திர மோடி போல் செய்த சாதனைகளை இதுவரை யாரும் செய்ததில்லை. எனவே தான் பாஜகவுடன் கூட்டணி என முடிவெடுத்தோம். எனவேதான் பாஜகவுடன் கூட்டணி என முடிவெடுத்தோம். பாஜகவிற்கு அதிமுக நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டது. எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கி அழகு பார்த்தது பாஜக. அதிமுக மைனாரிட்டியாக இருந்த நிலையில் ஓபிஎஸ் அணியை அக்கட்சியுடன் இணைத்து மெஜாரிட்டியாக்கியதே மோடிதான். தனிப்பட்ட முறையில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்திருக்க வாய்ப்பே இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் எடப்பாடி தமிழகத்தின் தலைவர் என பிரதமர் கூறிய நிலையில் தன்னிச்சையாக வெளியேறியது வருத்தத்திற்குரியது.
அவர்கள் சந்தர்ப்பத்திற்காக பேசுவதை திருத்திக் கொள்ள வேண்டும். யாரோ எடப்பாடியை தவறாக வழிநடத்துகிறார்கள். அண்ணாமலை விமர்சனம் செய்ததற்காக நாங்கள் விலகிச் சென்றோம் என எடப்பாடி பழனிசாமி சொல்வது தவறு. அண்ணாமலை பேசியது பாஜகவின் கருத்து இல்லை. அவரது சொந்தக் கருத்து, அதிமுக வெளியே செல்ல ஏதோ ஒரு காரணம் தேவை. அதற்கு அண்ணாமலையை குறிவைத்து வெளியேறி உள்ளனர். இது தவறு என எடப்பாடி சிந்திப்பார். பாஜக என்ன தவறு செய்தது என்பதை இதுவரை எடப்பாடி பழனிசாமியால் சுட்டிக் காட்ட முடியவில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் நான் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறேன். என் மகள் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவார். இவ்வாறு ஜான் பாண்டியன் கூறினார்.