இந்தியா முதன் முறையாக சொந்தமாக மனிதர்களை ககன்யான் திட்டம் மூலம் விண்வெளிக்கு அனுப்ப இருக்கிறது. இந்நிலையில் இன்று கேரளாவில் ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு செல்லும் வீரர்களை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தியுள்ளார்.
எதிர்வரும் காலங்களில் சர்வதேச விண்வெளி நிலையம் கலைந்து போக இருக்கிறது. ரஷ்யாவும், சீனாவும் தங்களுக்கு என தனியான விண்வெளி மையத்தை உருவாக்க இருக்கிறார்கள். இந்தியாவை பொறுத்த அளவில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்னர் ராகேஷ் சர்மா எனும் வீரர் விண்வெளிக்கு பறந்திருக்கிறார். அவரை பறக்க வைத்தது ரஷ்யாதான். அப்போது தொடங்கி தற்போது வரை விண்வெளி துறையில் ரஷ்யா-இந்தியா உறவு பிரிக்க முடியாததாக இருக்கிறது. இதை வைத்து எதிர்காலத்தில் ரஷ்யாவின் விண்வெளி மையத்தில் நமது வீரர்களுக்கு இடம் கோர முடியும். ஆனால் அதற்கு நமக்கு முதலில் சில அனுபவங்கள் தேவைப்படுகிறது. அதில் ஒன்றுதான் சொந்தமாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திறன். எனவே இந்தியா இந்த முறை எந்த நாடுகளின் உதவியின்றி தங்களது வீரர்களை விண்ணில் பறக்க வைக்க முடிவெடுத்திருக்கிறது. இதற்காக போடப்பட்ட ககன்யான் திட்டம் வரும் 2025ம் ஆண்டு செயல்படுத்தப்படும்.
ஏற்கெனவே சந்திரயான் 3, ஆதித்யா எல்-1 உள்ளிட்ட மிஷன்கள் வெற்றியடைந்துள்ள நிலையில், அதே உற்சாகத்தில் ககன்யான் திட்டத்திற்கு இஸ்ரோ தயாராகி வருகிறது. இந்த திட்டத்தின் பிரதான சோதனைகள் கடந்த ஆண்டு இஸ்ரோ வெற்றிகரமாக முடித்தது. அதாவது, மனிதர்களை விண்வெளிக்கு கொண்டு செல்லும் போது ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் ராக்கெட்டிலிருந்து மனிதர்கள் இருக்கும் கலனை பூமியில் பத்திரமாக தரையிறங்க வைக்கும் மிஷன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெற்றிகரமாக பரிசோதனை செய்து பார்த்தது இஸ்ரோ. இதற்காக தனியாக ஒரு ராக்கெட்டை வடிவமைக்கப்பட்டது, ராக்கெட்டின் உச்சியில் மனிதர்களை விண்வெளிக்கு கொண்டு செல்லும் மாதிரி கலன் (Crew Module) வைக்கப்பட்டிருந்தது. இந்த கலனை ஏந்திக்கொண்டு ராக்கெட் 17 கி.மீ உயரத்திற்கு ஒலியை விட 1.5 மடங்கு வேகத்தில் பறந்து சென்றது. அங்கிருந்து மாதிரி கலன் மட்டும் தனியாக பிரிந்து வங்கக்கடலில் பத்திரமாக தரையிறங்கியது. இப்படி தரையிறங்கும் போது, கடலுக்கும் கலனுக்கும் சுமார் 2 கி.மீ தொலைவு இருக்கும் போது கலனில் உள்ள பாராசூட் விரிந்து கலனின் வேகத்தை குறைத்தது. இப்படித்தான் பத்திரமாக தரையிறங்கியது. பின்னர் அந்த கலனை கடற்படை வீரர்கள் மீட்டனர்.
இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக இன்று ககன்யான் திட்டத்தின் வீரர்களை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். கேரளாவுக்கு வந்திருந்த மோடி, இஸ்ரோ மையத்தில் வீரர்களை அறிமுகப்படுத்தினார். அதாவது, குரூப் கேப்டன் பிரசாந்த் நாயர், பிரதாப், கிருஷ்ணன் மற்றும் விங் கமாண்டர் சவுகான் ஆகியோர் அடுத்த ஆண்டு விண்வெளிக்கு செல்கின்றனர். இவர்களை பாரத் மாதாகி ஜே எனக்கூறி மோடி அறிமுகப்படுத்தியுள்ளார். பின்னர் விழாவில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது:-
இந்த நால்வரும் சாதாரண மனிதர்கள் அல்ல. 140 கோடி இந்தியர்களின் கனவுகளை விண்வெளிக்கு எடுத்துச் செல்லப் போகும் நான்கு சக்திகள். 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியர் ஒருவர் விண்வெளிக்கு செல்கிறார். இந்த முறை நேரமும் நமதே, கவுண்டவுன் நமதே, ராக்கெட்டும் நமதே. இன்று இந்த 4 விண்வெளி வீரர்களைச் சந்தித்து அவர்களை நாட்டுக்கு அறிமுகம் செய்து வைக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர்களுக்கு இந்தியாவின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைய இந்தியாவின் பெருமை நீங்கள்தான். ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சிப் பயணத்திலும், நிகழ்காலத்தை மட்டுமல்ல, அதன் வருங்கால சந்ததியினரின் எதிர்காலத்தையும் வரையறுக்கும் சில தருணங்கள் உள்ளன. இன்று இந்தியாவிற்கு அது போன்ற ஒரு தருணம். இவ்வாறு அவர் கூறினார்.