ஒரு பெண் என்ன உடையை அணிய விரும்புகிறார் என்பது அவருடைய விருப்பம். அதை அவர்தான் அனுமதிக்க வேண்டும். இதுதான் என்னுடைய கருத்து என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஆடை சுதந்திரம் தொடர்பாக தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக மணிப்பூரில் இருந்து மும்பை வரை ‘பாரத் ஜோடோ நியாய யாத்திரை’ என்கிற பெயரில் காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி யாத்திரை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், இந்த யாத்திரையின் ஒரு பகுதியாக, உத்தர பிரதேசத்தின் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் நேற்று மாணவர்களுடன் உரையாடினார்.
அப்போது மாணவி ஒருவர் ஹிஜாப் குறித்து ராகுல் காந்தியிடம் கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர், “ஒரு பெண் எந்த உடையை அணிய விரும்புகிறார் என்பது அவருடைய விருப்பம். அதை அவர்தான் அனுமதிக்க வேண்டும். இதுதான் என்னுடைய கருத்து. நீங்கள் என்ன அணிகிறீர்கள் என்பதற்கு நீங்கள்தான் பொறுப்பு. எனவே, என்ன அணிய வேண்டும் என்பது உங்களின் முடிவு. மாறாக, நீங்கள் என்ன அணிய வேண்டும் என்பதை வேறு யாரும் தீர்மானிக்க வேண்டும் என்பதாக நான் நினைக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த 2022-ல் கர்நாடகாவில் பாஜக ஆட்சியின் போது இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. அங்குள்ள பியூ கல்லூரிகளில் ஹிஜாப் அணிய எதிர்ப்பு கிளம்பியதோடு பெரும் போராட்டம் வெடித்தது. இதையடுத்து கர்நாடகாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், கர்நாடகாவில் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது. ஆட்சி பொறுப்பேற்று சில மாதங்களில் கர்நாடகா கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடையை அதிரடியாக ரத்து செய்து அம்மாநில அரசு அறிவிப்பை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.