மணிப்பூரில் போலீஸ் அதிகாரி கடத்தப்பட்டதால் கூடுதல் ராணுவம் வரவழைப்பு!

மணிப்பூரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பதவியில் உள்ள காவல் அதிகாரி ஒருவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) கடத்தப்பட்டார். இதனால், அம்மாநிலத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. நிலைமையை கட்டுக்குள் வைக்க ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.

கிழக்கு இம்பால் மாவட்டத்தின் ஆரம்பை தென்க்கோல் என்ற மைத்தேயி அமைப்பினைச் சேர்ந்தவர்களால் காவல் அதிகாரி கடத்தப்பட்டுள்ளார். இதுகுறித்து மணிப்பூர் போலீஸார் கூறுகையில், “இம்பால் கிழக்கு பகுதியின் கூடுதல் காவல் கண்காணிப்பாளரான அமித் சிங், ஆயுதமேந்திய கும்பல் ஒன்றால் கடத்தப்பட்டு பாதுகாப்பு படையினரின் துரித நடவடிக்கையால் பின்னர் மீட்கப்பட்டார். மணிப்பூர் காவல் துறையின் செயல்பாட்டு பிரிவில் நியமிக்கப்பட்ட அமித் சிங்கின் வீட்டில் செவ்வாய்க்கிழமை மாலை 7 மணிக்கு ஆரம்பை தென்க்கோல் என்ற அமைப்பினைச் சேர்ந்தவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். வாகனங்களில் வந்த 200 பேர் அமித் சிங்கின் வீட்டில் நடத்திய இந்தத் தாக்குதலில் நான்கு வாகனங்கள் சேதமாகின. மீட்கப்பட்டுள்ள காவல்துறை அதிகாரி அமித் சிங் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் சம்பவம் குறித்து கடத்தப்பட்ட அதிகாரியின் தந்தை எம்.குல்லா கூறுகையில், “ஆயுதமேந்திய கும்பல் வீட்டுக்குள் நுழைந்ததும் நாங்கள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முயன்றோம். ஆனால் அவர்கள் திடீரென தாக்குதலில் ஈடுபட்டனர். நாங்கள் வீட்டுக்குள் சென்று பூட்டிக்கொண்டோம். நடந்த சம்பவம் குறித்து தனது மகனுக்கு தகவல் தெரிவித்தேன்” என்றார்.

தகவல் அறிந்ததும், தன் வீட்டைச் சூழ்ந்துள்ள கும்பலின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதை அறிந்தும், கடத்தப்படலாம் என்று தெரிந்தே போலீஸ் அதிகாரி தனது குழுவுடன் வீட்டுக்குச் சென்றார் என்று கூறப்படுகிறது. கடத்தல் சம்பவம் நடத்ததும் துரிதமாக செயல்பட்ட மணிப்பூர் காவல்துறையினர் கடத்தப்பட்ட காவல் கண்காணிப்பாளரை மீட்டனர்.

தாக்குதல் குறித்து பெயர் வெளியிட விரும்பாத போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “காவல்துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கடத்தப்பட்டதால் ஏற்பட்டுள்ள புதிய பதற்றம் காரணமாக பாதுகாப்புக்காக ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். இம்பால் கிழக்கு பகுதியில் 4 பிரிவு அசாம் ரைபில் படை நிலைநிறுத்தப்பட்டுள்ளது.” என்று தெரிவித்தார்.

வாகனத்திருட்டில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட கும்பலைச் சேர்ந்த 6 பேரை சம்மந்தப்பட்ட அதிகாரி கைது செய்த காரணத்தால் இந்தக் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தக் கைது சம்பவத்தினைத் தொடர்ந்து அவர்களை விடுவிக்கக் கோரி மெய்ரா பைபிஸ் (மைதேயி பெண்கள் குழு) என்ற அமைப்பினர் போராட்டம் நடத்தியிருந்தனர்.