“பாஜக மீது தமிழக மக்கள் வைத்திருக்கக் கூடிய நம்பிக்கை கடந்த தேர்தலிலேயே தெரிந்தது. வரக்கூடிய மக்களவைத் தேர்தலில் பாஜக மீது எந்தளவுக்கு தமிழக மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர் என்பது மிகத் தெளிவாகத் தெரியும்” என்று பிரதமர் மோடியின் பேச்சுக்கு திமுக எம்.பி. கனிமொழி எதிர்வினையாற்றி உள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் திமுக எம்.பி. கனிமொழி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தேர்தல் வரக்கூடிய இந்த நேரத்தில், மத்திய பாஜக அரசு திட்டங்களை அறிவித்திருக்கிறது. தமிழகத்தின் நன்மைக்காக, எத்தனையோ திட்டங்கள் தொடர்பாக தமிழக முதல்வர், பிரதமரைச் சந்திக்கும்போது கோரிக்கையாக வைக்கிறார். ஆனால், எதையுமே இதுவரை நிறைவேற்றிக் கொடுத்தது இல்லை. அண்மையில் தமிழகத்தில் ஏற்பட்ட புயல், வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கேட்கப்பட்டது. அந்த நிதியைக் கூட மத்திய அரசு இதுவரைக்கும் கொடுக்கவில்லை. இதுதான் உண்மையான நிலை. எனவே, தமிழகத்துக்கு மத்திய அரசு திட்டங்களைக் கொண்டு வந்தபோது எந்தக் காலத்திலும் தடுத்தது இல்லை.
இந்தியாவிலேயே விளம்பரங்களுக்காக அதிகமாக செலவழிக்கக்கூடிய கட்சி பாஜக. அவர்களது விளம்பரங்களில் தேசியக் கொடியைப் பயன்படுத்துவதை நான் பார்த்ததில்லை. பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்துக்காக மத்திய அரசு கால்வாசிதான் பணம் கொடுக்கின்றனர். முக்கால்வாசி அளவு பணத்தை தமிழக அரசுதான் கொடுக்கிறது. மத்திய அரசு கொடுக்கும் ரூ.70,000-ஐ வைத்துக்கொண்டு எந்த வீட்டையும் கட்ட முடியாது. ஆனால், அந்தத் திட்டத்துக்கு பிரதமரின் வீடு வழங்கும் திட்டம் என்று பெயர் வைத்து, ஸ்டிக்கர் கொண்டிருப்பது பாஜகதான். பல மாநில எம்பிக்கள் இத்திட்டம் குறித்து பார்வையிட வரும்போது, ஏன் இந்த திட்டத்துக்கு முதல்வரின் திட்டம் என்று பெயர் வைக்கவில்லை என்று எங்களைக் கேட்கின்றனர். எனவே, யார் ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பது மக்களுக்கேத் தெரியும்” என்றார்.
திமுக என்ற கட்சியே தமிழகத்தில் இனி இருக்காது என்று பிரதமர் பேசியிருப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த கனிமொழி, “இப்படி சொன்னவர்கள் நிறைய பேரை நானும் பார்த்திருக்கிறேன். அவர்களும் காணாமல் போயிருக்கின்றனர். திமுக இருந்துகொண்டேதான் இருக்கிறது” என்றார்.
பாஜக மீது தமிழக மக்கள் நம்பிக்கைக் கொண்டுள்ளனர். தமிழகத்தில் இருந்து திமுக அகற்றப்படும் என்ற பிரதமர் பேச்சு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “பாஜகவினர் வைத்திருக்கக்கூடிய நம்பிக்கை கடந்த தேர்தலிலும் தெரிந்தது. வரக்கூடிய மக்களவைத் தேர்தலில் பாஜக மீது தமிழக மக்கள் எந்தளவுக்கு நம்பிக்கை வைத்துள்ளனர் என்பது மிகத் தெளிவாகத் தெரியும்” என்றார்.
குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதள திட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்தைக் கொண்டு வர வேண்டும் என்று மறைந்த முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியிருந்தார். அதன்பின்னர், அந்த கோரிக்கை தொடர்பாக தொடர்ந்து நாடாளுமன்றத்தில் திமுக சார்பில் நானும் எழுப்பியிருக்கிறோம். அமைச்சர்களைச் சந்தித்து இருக்கிறோம். பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். இந்தத் திட்டத்துக்கு நிலங்கள் ஒதுக்கீட்டை தமிழக முதல்வர்தான் அப்பணிகளைத் துரிதப்படுத்தி, அந்த இடத்தை வழங்கியிருப்பது தமிழக முதல்வர்தான். இந்த பட்ஜெட்டில் கூட 2000 ஏக்கர் பரப்பளவில் அத்திட்டத்துக்கான தொழிற்சாலைகள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த திட்டத்தைக் கொண்டுவர தமிழக அரசுதான் தொடர் முயற்சிகளை மேற்கொண்டது” என்று கனிமொழி கூறினார்.