ஸ்டெர்லைட் வழக்கில் உச்ச நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை இயங்கி வந்தது. இந்த ஆலையால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இருப்பதாக கூறி ஆலையை மூட வலியுறுத்தி மக்கள் தொடர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டமானது 100 நாட்கள் நடந்தது. 100வது நாள் போராட்டத்தில் போராட்டக்காரர்கள் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டு பெரும் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது வன்முறை ஏற்பட்டதாக தெரிவித்த காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டின் போது 13 பேர் உயிரிழந்தனர். கடந்த 2018-ல் நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது.
சென்னை உயர் நீதிமன்றமும் ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டது. இதனை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்து வந்ததது. இந்த நிலையில் இன்று இந்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. அதாவது ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது. மேலும், ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு சீல் வைத்தது சரியானதுதான். சுற்றுச்சூழலை பாதுகாப்பது என்பது மாநில அரசின் முக்கியமான வேலைகளில் ஒன்று என கூறியது. மேலும் நீதிபதிகள் கூறுகையில், ஸ்டெர்லைட் ஆலை ஏராளமான விதிமீறல்களில் ஈடுபட்டிருக்கிறது. காப்பர் கழிவுகளை பொது வெளியில் விட்டு காற்று மாசை ஏற்படுத்தியுள்ளது. எனவே ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க முடியாது. இது தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பாக கையாண்டிருக்கிறது. உயர்நீதிமன்றம் விசாரித்ததில் எந்த வரம்பு மீறலும் இல்லை. தமிழக அரசு ஆலையை மூடி சீல் வைத்தது சரியானதுதான். சுற்றுச்சூழலை பாதுகாப்பது என்பது மாநில அரசின் முக்கியமான வேலைகளில் ஒன்று” என்று உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது:-
தூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கு எதிரான ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நமது அரசு முன்வைத்த வலுவான வாதங்களால், ஆலை நிர்வாகத்தின் அனைத்து விளக்கங்களும் நொறுங்கி, ஆலையை மூடியது சரியே என்று உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. நச்சு ஆலைக்கு எதிராகத் தொடர்ந்து போராடிய மக்களுக்கும், நமது அரசின் வலிமையான சட்டப் போராட்டங்களுக்கும் கிடைத்த வெற்றி இது! எத்தகைய ஆபத்தில் இருந்தும் மக்களைக் காப்போம்! இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.