செய்தி சேனல் ஒளிப்பதிவாளர் மீது திமுக குண்டர்கள் தாக்குதல்: அண்ணாமலை கண்டனம்!

“திமுக பிரமுகர் சிற்றரசு என்பவருக்குச் சொந்தமான, சஹாரா கூரியர் நிறுவனத்தை, தேசிய போதைப் பொருள் கட்டுப்பாட்டு ஆணைய அதிகாரிகள் சோதனையிட்டதைப் படம்பிடித்த தனியார் தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் மீது திமுக குண்டர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் கூறியுள்ளதாவது:-

நமது நாட்டின் கலாச்சார தலைநகரமான சென்னை, திமுக ஆட்சியில் போதைப்பொருள் தலைநகரமாக மாற்றப்பட்டுள்ளது. 2000 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை கடத்திய, திமுக நிர்வாகியும், சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரருமான ஜாபர் சாதிக் என்பவரும் அவரது சகோதரர்களும் கைது செய்யப்படுவதில் இருந்து தப்பியோடி வருகின்றனர். நேற்றைய தினம் குஜராத் கடல் பகுதியில், தமிழகப் படகு மூலம் எடுக்கப்படவிருந்த ரூ.1,200 கோடி மதிப்பிலான போதைப்பொருட்களை தேசிய போதைப் பொருள் கட்டுப்பாட்டு ஆணையம் கைப்பற்றியுள்ளது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், போதைப்பொருள் வியாபாரிகளின் சொத்துகளை பறிமுதல் செய்வேன் என்று கூறினார். ஆனால் அதற்காக ஒரு துரும்பைக் கூட அசைக்கவில்லை என்பது, அவரது ஆட்சியில் பல மடங்கு அதிகரித்துள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்களின் சொத்துக்கள் மூலம் தெரிய வருகிறது. இதற்கெல்லாம் உச்சகட்டமாக, கோபாலபுரம் இளவரசருக்கு நெருக்கமான திமுக பிரமுகர் சிற்றரசு என்பவருக்குச் சொந்தமான, சஹாரா கூரியர் நிறுவனத்தை, தேசிய போதைப் பொருள் கட்டுப்பாட்டு ஆணைய அதிகாரிகள் சோதனையிட்டதைப் படம்பிடித்த தனியார் தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் மீது திமுக குண்டர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சஹாரா கூரியர்ஸ் நிறுவனம்தான், ஜாபர் சாதிக்கின் போதைப்பொருள் விநியோக மையப்புள்ளியாக அறியப்படுவது குறிப்பிடத்தக்கது.

திமுகவினரின் இந்த காட்டுமிராண்டித்தனமான செயலை தமிழக பாஜக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், முதல்வர் பொறுப்பு வகிப்பது தமிழக மக்களுக்கு உழைப்பதற்காகவே தவிர போதைப்பொருள் வியாபாரிகளுக்காக அல்ல என்பதை நினைவுபடுத்துகிறோம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.