பெங்களூரு குண்டுவெடிப்பை பாஜக அரசியலாக்குகிறது: டி.கே. சிவகுமார்

பெங்களூருவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பை பாஜக அரசியலாக்குவதாக கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் விமர்சித்துள்ளார்.

பெங்களூரு ஒயிட்பீல்டு பகுதியில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் 1 மணியளவில் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்து சிதறியது. இதில் உணவக பணியாளர்கள் இருவர், வாடிக்கையாளர்கள் 7 பேர் என 9 பேர் காயமடைந்தனர். காயமடைந்த 9 பேரும் ஒயிட் ஃபீல்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். குண்டுவெடிப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள கர்நாடகாவின் பிரதான எதிர்க்கட்சியான பாஜக, சம்பவத்துக்கு பொறுப்பேற்று முதல்வர் சித்தராமையா பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை, தேசவிரோத சக்திகள், ஆளும் கட்சியின் ஆதரவை பெற்றிருப்பதே இதற்குக் காரணம் என குற்றம் சாட்டினார்.

இந்நிலையில், முதல்வர் பதவி விலக வேண்டும் என்ற பாஜகவின் கோரிக்கை குறித்த கேள்விக்கு பதிலளித்த டி.கே. சிவகுமார், குண்டுவெடிப்பு சம்பவத்தை வைத்து அவர்கள் அரசியல் செய்கிறார்கள். இதன்மூலம், பெங்களூருவின் இமேஜை அவர்கள் கெடுக்கிறார்கள். அவர்கள் ஆட்சியில் இருந்தபோது என்னவெல்லாம் நடந்தது என்பதை அவர்கள் பார்க்க வேண்டும். அதை அவர்கள் மறந்தது வெட்கக்கேடானது. கர்நாடகாவை காயப்படுத்துவது என்பது நாட்டை காயப்படுத்துவதற்கு சமம். குண்டுவெடிப்பு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு அவர்களுக்கு சுதந்திரம் அளித்துள்ளது. இந்த விவகாரத்தை அரசு சீரியஸாக எடுத்துக் கொண்டுள்ளது. இதுபோன்ற பிரச்சினையில் அரசியல் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்கள் அரசின் கவுரவத்தை கெடுக்கிறார்கள் என விமர்சித்துள்ளார்.

வெடிவிபத்து குறித்துப் பேசிய கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி பரமேஸ்வரா, “நாங்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். 8 குழுக்கள் அமைக்கப்பட்டு அனைத்தும் வெவ்வேறு திசைகளில் செயல்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றன. பல சிசிடிவி காட்சிகளை சேகரித்துள்ளோம். பொறாமை காரணி உள்ளதா என்பது உட்பட ஒவ்வொரு கோணத்திலும் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இந்த தருணத்தில் அனைவரும் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இதை அரசியல் பிரச்சனையாக்க வேண்டாம் என்றும் எதிர்க்கட்சிகளிடம் கேட்டுக்கொள்கிறேன். மங்களூரு குண்டுவெடிப்புக்கும் இதற்கும் தொடர்பு உள்ளதா என்பது எங்களுக்குத் தெரியாது. பாஜக எதிர்மறையான அறிக்கைகளை வெளியிடக்கூடாது” என்று தெரிவித்தார்.