சீனாவை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசிய அமெரிக்க அதிபர் பைடன், இந்தியா உடனான உறவு குறித்தும் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
உலகின் இரு பெரும் பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகள் என்றால் அது அமெரிக்காவும் சீனாவும் தான். இந்த இரு நாடுகளுக்கும் இடையே பல காலமாக மோதல் போக்கு நிலவி வருவது அனைவருக்கும் தெரியும்., அதிலும் டிரம்ப் அதிபராக இருந்த போது அவர் சீனாவை மிகக் கடுமையாக விமர்சித்திருந்தார். அதேநேரம் பைடன் அதிபராக வந்த பிறகு விமர்சனங்கள் குறைந்தன. சீனாவுக்கு எதிரான விமர்சனங்கள் குறைந்தாலும் சீனா உடன் அமெரிக்காவுக்கு ஒரு மோதல் போக்கே நிலவி வந்தது. இதற்கிடையே சீனாவின் நியாயமற்ற பொருளாதார நடைமுறைக்கு அமெரிக்கா இப்போது வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தைவான் கடல் பகுதியில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ள அமெரிக்கா இந்தியா போன்ற நட்பு நாடுகளுடன் அதன் உறவுக்கு மீண்டும் புத்துயிர் அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் இந்தாண்டு அதிபர் தேர்தல் நடக்கும் நிலையில், அதற்கு முன்பாக தனது கடைசி ஸ்டேட் ஆஃப் யூனியன் உரையை அதிபர் பைடன் வாசித்தார். ஸ்டேட் ஆஃப் யூனியன் உரை என்பது ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் அமெரிக்க அதிபர் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் வாசிக்கும் உரையாகும். நம்ம ஊரில் எப்படி நாடாளுமன்றம் தொடங்கும் போது குடியரசுத் தலைவர் உரையை வாசிப்பாரோ அதேபோல அங்கே அதிபராக இருக்கும் நபர் இந்த ஸ்டேட் ஆஃப் யூனியன் உரையை வாசிப்பார். சீனாவைக் கடுமையாகத் தனது உரையில் விமர்சித்திருந்த அதிபர் பைடன், அதேநேரம் சீனாவுடன் அமெரிக்கா போட்டியை விரும்பினாலும் மோதலை விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்தார். இந்த 21ஆம் நூற்றாண்டில் சீனா கடும் போட்டியைக் கொடுக்கும் நிலையில், அதைச் சமாளித்து உலகில் வெற்றிகரமான நாடக தொடர அமெரிக்கா வலுவாகவே இருப்பதாக பைடன் தெரிவித்தார்.
இது தொடர்பாக பைடன் மேலும் கூறுகையில், “நாங்கள் சீனாவின் நியாயமற்ற பொருளாதார நடைமுறைக்கு எதிராக நிற்கிறோம், தைவான் கடல் முழுவதும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை ஏற்படுத்த நாங்கள் தேவையான நடவடிக்கை எடுக்கத் துணை நிற்போம். மேலும், எங்கள் நட்பு நாடுகளான இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், தெற்கு கொரியா ஆகிய நாடுகளுடனான உறவுக்கு புத்துயிர் அளிக்கப் போகிறோம். எதிர்க்கட்சியினர் பல ஆண்டுகளாகச் சீனா வளர்ந்து வருகிறது.. அமெரிக்கா வீழ்ந்து வருகிறது எனத் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். உண்மையில் இதற்கு நேர் மாறாகவே நடந்து வருகிறது. அமெரிக்கா புதிய உச்சத்தைத் தொடும் வகையில் வளர்ந்தே வருகிறது. அமெரிக்கா உலகின் சிறந்த பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது.
நான் பதவிக்கு வந்ததிலிருந்து, நமது ஜிடிபி உயர்ந்தே வந்துள்ளது. மேலும் சீனாவுடனான நமது வர்த்தகப் பற்றாக்குறை கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப் பெரியளவில் குறைந்துள்ளது. நமது நாட்டின் அதிநவீன ராணுவ தொழில்நுட்பங்களைச் சீனா தனது ஆயுதங்களில் பயன்படுத்தாமல் இருப்பதை நான் உறுதி செய்துள்ளேன். எனக்கு முன்னால் அதிபராக இருந்தவர் (டிரம்ப்) வெறுமன சீனா குறித்து கடுமையாகப் பேசிக் கொண்டு மட்டுமே இருந்தார். ஆனால், அவர் சீனாவைத் தடுக்க எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. ஆனால், நாங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். 21 ஆம் நூற்றாண்டுக்கான போட்டியில் சீனா அல்லது வேறு எந்த நாடாக இருந்தாலும் சரி அவர்களை வெல்லும் நிலையில் தான் அமெரிக்கா இருக்கிறது” என்று அவர் தெரிவித்தார்.