பொதுத்தேர்வு எழுதவுள்ள 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விஜய் வாழ்த்து!

பொதுத்தேர்வு எழுதவுள்ள 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில், 2023 – 2024ஆம் கல்வியாண்டில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை கடந்த டிசம்பர் மதம் அறிவிக்கப்பட்டது. அதன்படி 7,72,000 மாணவர்கள் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வையும், 8 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் 11 ம் வகுப்பு பொதுத்தேர்வையும், 9 லட்சத்து 10 ஆயிரம் மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வையும் எழுதுகின்றனர். 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 1ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதியுடன் பொதுத் தேர்வுகள் அனைத்தும் முடிவடைந்துள்ளது. மேலும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 4ஆம் தேதி தொடங்கி மார்ச் 25ஆம் தேதியான இன்றுடன் பொதுத் தேர்வுகள் முடிவடைந்துள்ளன. மார்ச் 26 ஆம் தேதியான நாளை முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் தொடங்கி நடைபெற உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான 4,107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 9 லட்சத்து 10 ஆயிரம் மாணவர்கள் மற்றும் 28 ஆயிரம் தனித்தேர்வர்களும் தேர்வு எழுத உள்ளனர்.

இந்நிலையில் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய்யும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். “தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை நாளை எழுத உள்ள என்னருமை தம்பி, தங்கைகள் அனைவரும் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற, நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என விஜய் தெரிவித்துள்ளார்.