மதுபான கொள்கை வழக்கு: கவிதாவுக்கு மேலும் 14 நாள் நீதிமன்ற காவல்!

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இன்றுடன் அவரது நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில், மேலும் 14 நாட்கள் காவலில் வைக்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி புதிய மதுபான கொள்கையில் முறைகேடு செய்திருப்பதாக கவிதா மீது வழக்குப் பதிவு செய்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வந்தது. இது குறித்த வழக்கு விசாணைக்கு ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை தொடர்ந்து சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், ஓரிரு முறை மட்டுமே ஆஜரான கவிதா, பல முறை சம்மன்களை புறக்கணித்தார். இந்நிலையில் கடந்த 15ம் தேதி ஹைதராபாத்தில் அவரது இல்லத்தில் சுமார் 5 மணி ரெய்டு நடத்தப்பட்டு கவிதாவை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே இந்த வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கவிதாவின் கைது சலசலப்புகளை ஏற்படுத்தியிருந்தது. ஜார்க்ண்ட் முதலமைச்சர் உட்பட பல முக்கிய தலைவர்களை அடுத்தடுத்து அமலாக்கத்துறை கைது செய்துள்ளதால் பிஆர்எஸ் கட்சி போராட்டத்தில் இறங்கியுள்ளது. மறுபுறம், அமலாக்கத்துறை தனது விசாரணையையும், ரெய்டையும் தீவிரப்படுத்தியிருக்கிறது. கவிதாவின் நெருங்கிய உறவினர்கள் சிலர் விரைவில் கைது செய்யப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், இன்றுடன் கவிதாவின் நீதிமன்ற காவல் நிறைவடைந்தது. இதனையடுத்து இன்று அவரை டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள், கவிதாவை மேலும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரினர். இதனையடுத்து அவருக்கு மேலும் 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டிருக்கிறது.