கங்கனா பற்றி காங்கிரஸ் பெண் நிர்வாகி சுப்ரியா ஸ்ரீநேத் சர்ச்சை கருத்து!

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநேத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கங்கனா ரனாவத் புகைப்படத்துடன் சர்சைக்குரிய ஒரு பதிவு வெளியானது.

இந்தி திரைப்பட நடிகை கங்கனா ரனாவத் பாஜக-வுக்கு ஆதரவான கருத்துகளைத் தெரிவித்து வந்தார்.இந்நிலையில், இமாச்சல பிரதேசத்தில் அவரது சொந்த மாவட்டமான மண்டி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளராக கங்கனா அறிவிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநேத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கங்கனா ரனாவத் புகைப்படத்துடன் சர்சைக்குரிய ஒரு பதிவு வெளியானது. அதேபோன்று, குஜராத் காங்கிரஸ் நிர்வாகி எச்.எஸ்.அஹிர் எக்ஸ் பக்கத்தில் கங்கனா குறித்து ஒரு கமென்ட் வெளியானது. இதில் சுப்ரியா ஸ்ரீநேத்தின் பதிவை உடனடியாக ஸ்கிரீன்ஷாட் எடுத்து, தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு கண்டனம் தெரிவித்திருந்தார் கங்கனா.

இந்த விவகாரம் சமூக ஊடகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனே தனது இன்ஸ்டா பதிவை நீக்கினார் சுப்ரியா. மேலும், தன்னுடைய ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளைப் பலர் அணுகுகின்றனர். அதில், யாரோ ஒருவர் இப்படி தகாத முறையில் பதிவிட்டிருக்கிறார். தன்னை அறிந்த அனைவருக்கும், தான் எந்தப் பெண்ணிடமும் அநாகரிகமான கருத்துகளை ஒருபோதும் கூற மாட்டேன் என்று தெரியும் என்று வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கமளித்தார் சுப்ரியா.

இதனிடையில் நேற்று சண்டிகர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கங்கனா ரனாவத் கூறியதாவது:-

எந்த துறையை சேர்ந்த பெண்ணாக இருப்பினும் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும். ஆனால், பல ரிஷிகள் வாழ்ந்த புண்ணிய பூமியான சின்ன காசி என்றழைக்கப்படும் மண்டி தொகுதி விவகாரத்தில் நான் மிகவும் புண்பட்டிருக்கிறேன். எனது கட்சியின் கண்ணியத்தைக் காக்க வேண்டிய கடமை எனக்குள்ளது. ஆகையால் பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அவர்களுடனான டெல்லி சந்திப்புக்கு பிறகே இது தொடர்பாக என்ன செய்வதென்று முடிவு செய்யப்படும். அவர்களது அறிவுறுத்தலை பின்பற்றி நடப்பேன். இவ்வாறு கங்கனா கூறியுள்ளார்.

அதைத் தொடர்ந்து, தேசிய மகளிர் ஆணையத் தலைவி ரேகா ஷர்மா கூறியதாவது:-

நடிகை கங்கனாவுக்கு எதிராக சுப்ரியா ஸ்ரீநேத், எச்.எஸ். அஹிர்ஆ கியோரின் பதிவுகள் தொடர்பாக அவர்கள் மீது உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. தேர்தல் ஆணையமும் காங்கிரஸ் மீதும் அதன் தலைவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டிருக்கிறோம். ஒரு பெண்ணே மற்றொரு பெண் மீது இவ்வளவு கீழ்த்தரமான வசைகளைப் பிரயோகிப்பது துரதிருஷ்டவசமானது. இந்த விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையம் கறாராக அணுகும். இவ்வாறு அவர் கூறினார்.