இரட்டை இலை சின்னம்: ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தியிடம் தேர்தல் ஆணையம் விசாரணை!

இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரிய மனு மீது ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் வா.புகழேந்தியிடம் இந்திய தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தியது.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற அமைப்பை தொடங்கினார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு, ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்த தொகுதியில் போட்டியிட முடிவு செய்த, ஓ.பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் மனுதாக்கல் செய்தார்.

பின்னர், அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “பக்கெட், பலாப்பழம், திராட்சை பழம் ஆகிய சின்னங்களில் ஏதேனும் ஒன்றை ஒதுக்க வேண்டுமென கேட்டிருக்கிறேன்” என்றார்.

முன்னதாக, அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதித்த நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, அவரது தரப்பில் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேர்தல் ஆணையத்தை அணுக எந்த தடையும் இல்லை. இந்த வழக்கில் தற்போது எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக்கூறி, இறுதி விசாரணைக்காக வழக்கை ஜூன் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

அதேபோல், இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு, அதிமுக பெயர் மற்றும் கட்சிக் கொடியைப் பயன்படுத்துவது தொடர்பாக தங்களது தரப்பில் அளிக்கப்பட்டுள்ள மனுவை விரைவாக பரிசீலிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த வா.புகழேந்தி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இரட்டை இலை சின்னம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் புகழேந்தி அளிக்கும் புதிய மனுவை விரைவாக பரிசீலிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, தொண்டர்களையும், கட்சியையும் பாதிக்கும் என்பதால் இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும். இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்தி படுதோல்வியை தழுவுவதை அதிமுக தொண்டர்கள் விரும்பவில்லை. கட்சி உடைந்து நிற்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் புகழேந்தி மனு கொடுத்தார். அந்த மனு தொடர்பாக நேற்று அவரிடம் ஆணையத்தின் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இதற்கிடையில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில், இந்திய தேர்தல் ஆணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள மனுவில், “நான்தான் அதிமுவின் ஒருங்கிணைப்பாளர் என்று தேர்தல் ஆவணங்களில் உள்ளன. அதனால், என்னை அங்கீகரித்து இரட்டை இலைக்கு ஏ மற்றும் பி படிவங்களில் கையெழுத்திட என்னை அனுமதிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், இரு தரப்பினருக்கும் பொதுவான சின்னங்களை ஒதுக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.